நரிக்குறவர் – குருவிக்காரர் சமூகத்தினர் பழங்குடியினர் பட்டியலில் சேர்ப்ப்பு..! முதல்வர் மு.க.ஸ்டாலின் வரவேற்பு…

சென்னை: நரிக்குறவர் – குருவிக்காரர் சமூகத்தினர் பழங்குடியினர் பட்டியலில் சேர்க்கப்படும் அரசியல் சாசன திருத்த மசோதா பாராளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்டு உள்ளது. இதை வரவேற்றும்  மத்தியஅரசுக்கு நன்றி தெரிவித்தும்   முதல்வர் மு.க.ஸ்டாலின் டிவிட் பதிவிட்டுள்ளார்.

தமிழகத்தில் குருவிக்காரர், நரிக்குறவர் உள்ளிட்ட சில சமூகத்தினர் தங்களை பழங்குடியினர் பிரிவில் சேர்த்து சாதிச் சான்றிதழ் வழங்க வேண்டும் என்று போராடி வருகின்றனர். இதுதொடர்பாக அரசுக்கும், முதல்வருக்கும் அவர்கள் கோரிக்கை விடுத்து வந்தனர். இந்தச் சூழலில், கடந்த மார்ச் 19-ம் தேதி பிரதமர் நரேந்திர மோடிக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் கடிதம் எழுதியிருந்தார். அதில், நரிக்குறவர், குருவிக்காரர் சமூகத்தினரை தமிழகத்தின் பழங்குடியினர் பட்டியலில் சேர்க்க வேண்டும் என வலியுறுத்தி, அதற்கான பல்வேறு காரணங்களையும் தெரிவித்திருந்தார்.

பிரதமருக்கு அவர் எழுதியிருந்த கடிதத்தில், ‘நரிக்குறவர்கள் சமூகம், மிகவும் பின்தங்கிய மற்றும் பாதிக்கப்பட்ட சமூகங்களில் ஒன்று. பழங்குடியினர் பட்டியலில் சேர்ப்பதன் மூலம் அவர்கள் அனைத்து அரசமைப்பு ரீதியிலான பாதுகாப்பு மற்றும் நலத்திட்டங்களை பெற தகுதியுடையவர்களாவர். இந்த சமூகத்தை பழங்குடியினர் பட்டியலில் சேர்ப்பது நீண்டகாலமாக நிலுவையில் உள்ளது. இந்த விவகாரத்தில் தாங்கள் உடனடியாக தலையிட்டு நரிக்குறவர், குருவிக்காரர் சமூகத்தினரை பழங்குடியினர் பட்டியலில் சேர்க்க நடவடிக்கை எடுக்க வேண்டும்’ என கோரியிருந்தார்.

இந்j நிலையில், டெல்லியில் பிரதமர் நரேந்திர மோடி தலைமையில் செப்.14-ம் தேதி நடந்த மத்திய அமைச்சரவைக் கூட்டத்தில், நரிக்குறவர், குருவிக்காரர் என அழைக்கப்படுவோரை பழங்குடியினர் பட்டியலில் சேர்க்க ஒப்புதல் அளிக்கப்பட்டது. இதன் காரணமாக  பழங்குடியினருக்கு கிடைக்கும் அனைத்து சலுகைகளும் இனி நரிக்குறவர், குருவிக்காரர், ஹட்டி, பிரிஜியா சமூகத்தினருக்கும் கிடைக்கும் என கூறப்பட்டது.

இந்த நிலையில், தற்போது நடைபெற்று வரும் நாடாளுமன்ற குளிர்கால கூட்டத்தொடரில், நரிக்குறவர், குருவிக்காரர் சமுதாயக்கு பழங்குடியினர் அந்தஸ்து வழங்கும் மசோதா நேற்று (வியாழக்கிழமை)  மக்களவையில் தாக்கல் செய்யப்பட்டது. இந்த மசோதாவுக்கு மக்களவையில் அரசியல் வேறுபாடுகள் கடந்து பல்வேறு கட்சி உறுப்பினர்களும் ஒருமனதாக ஆதரவளித்த நிலையில், இம்மசோதா மக்களவையில் நிறைவேற்றப்பட்டது.

அடுத்தக்கட்டமாக இந்த மசோதா மாநிலங்களவைக்கு அனுப்பி வைக்கப்படும். மாநிலங்களவை உறுப்பினர்களின் ஒப்புதலைப் பெற்று குடியரசுத் தலைவருக்கு அனுப்பி வைக்கப்படும். அதன்பின்னர் அரசாணை வெளியிடப்பட்டு இந்தச் சட்டம் அமலுக்கு வரும். அதன்பிறகு, தமிழகத்தின் திருத்தப்பட்ட பழங்குடியினர் பட்டியலில் புதிதாக சேர்க்கப்பட்ட சமூகங்களின் உறுப்பினர்கள், மத்திய அரசின் தற்போதைய நலத் திட்டங்களின் பயன்களை பெற முடியும். மெட்ரிக் படிப்புக்கு பிந்தைய கல்வி உதவித்தொகை, வெளிநாடுகளில் படிப்பதற்கான தேசிய கல்வி உதவித்தொகை, தேசிய ஆய்வு உதவித்தொகை, உயர்தரக் கல்வி, தேசிய ஷெட்யூல்டு பழங்குடியினர் நிதி மற்றும் மேம்பாட்டு கழகத்திடம் இருந்து சலுகை கடன்கள், ஷெட்யூல்டு பழங்குடியின மாணவர்கள் மற்றும் மாணவியருக்கான விடுதிகள் போன்ற திட்டங்கள் மூலம் இந்த இனத்தவர் பயன்பெற முடியும். மேலும், மத்திய அரசு கொள்கையின்படி, அரசுப் பணிகள் மற்றும் கல்வி நிறுவனங்களில் மாணவர் சேர்க்கை உள்ளிட்ட பயன்களையும் இவர்கள் பெறமுடியும்.

இந்த மசோதாவை வரவேற்று தமிழக முதமைச்சர் மு.க.ஸ்டாலின் டிவிட் பதிவிட்டுள்ளார். அதில்,  சமூகத்தின் கண்ணியமான வாழ்க்கைக்கான அனைத்து நடவடிக்கைகளையும் நாங்கள் தொடர்ந்து மேற்கொள்வோம் என குறிப்பிட்டுள்ளார்.

இதுதொடர்பாக தனது டிவிட்டர் பக்கத்தில், ’பிரதமர் நரேந்திர மோடி அவர்களுக்கு ஏற்கனவே நரிக்குறவர் – குருவிக்காரர் சமூகத்தினரை பழங்குடியினர் பட்டியலில் சேர்ப்பதற்காக கடிதம் எழுதி இருந்தேன். எங்களது தொடர் முயற்சியின் விளைவாக மக்களவையில் இதற்கான மசோதா குறிப்பிடத்தக்க வகையில் நிறைவேற்றப்பட்டதை வரவேற்கிறோம். சமூகத்தின் கண்ணியமான வாழ்க்கைக்கான அனைத்து நடவடிக்கைகளையும் நாங்கள் தொடர்ந்து மேற்கொள்வோம்’ என பதிவிட்டுள்ளார்.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.