இந்தியாவிலேயே அனைத்து சமூகத்தினரையும் உள்ளடக்கி இருப்பதிலும், கல்வி வளர்ச்சிக்கு முக்கியத்துவம் கொடுப்பதிலும் சிறந்து விளங்கும் மாநிலம் என்றால் அது தமிழ்நாடு தான். இந்தியாவிலுள்ள மற்ற பெரிய மாநிலங்களை பின்னுக்கு தள்ளி சிறப்பாக செயல்படும் பெரிய மாநிலமாக தமிழ்நாடு விளங்கி வருகிறது. தமிழ்நாட்டிற்கு இப்படியொரு அங்கீகாரம் கிடைத்திருப்பதற்கு காரணம் தமிழக அரசின் துரிதமான செயல்பாடுகள் தான். உலகையே ஆட்டிப்படைத்த கொரோனா பெருந்தொற்று காலத்திலும் மற்ற இடங்களை காட்டிலும் தமிழ்நாடு பெரியளவில் பாதிப்பை எதிர்கொள்ளவில்லை. அதுமட்டுமின்றி பெருந்தொற்று சமயத்தில் சிறப்பாக செயல்பட்டது மற்றும் எவ்வித எதிர்மறையான வளர்ச்சியையும் பதிவு செய்யாத சில மாநிலங்களில் தமிழ்நாடும் ஒன்றாகும்.
இதுதவிர, தமிழ்நாடு மொத்த மாநில உள்நாட்டு உற்பத்தியில் $290 பில்லியன் அதாவது ரூ.21.6 லட்சம் கோடியுடன் இந்தியாவின் இரண்டாவது பெரிய பொருளாதாரம் நிறைந்த மாநிலமாகவும் சிறந்து விளங்குகிறது. தற்போதுள்ள பொருளாதாரத்தின் இந்த அளவை டிரில்லியன் டாலர் அளவில் மாற்றவே தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் போராடி வருகிறார். தமிழகத்தை மிகப்பெரியளவில் பொருளாதாரம் மிகுந்த நாடாக மாற்ற தமிழக அரசு உலகப் புகழ்பெற்ற பொருளாதார நிபுணர்களைக் கொண்ட பொருளாதார ஆலோசனைக் குழுவை அமைத்துள்ளது. இந்த குழுக்களின் மூலம் மாநிலத்தின் பொருளாதார நிலையை சிறந்த முறையில் உயர்த்தக்கூடிய துறைகளை அடையாளம் காணவும், அவற்றின் வளர்ச்சிக்கான திறனை ஆய்வு செய்யவும், எந்தவொரு பொருளாதார அதிர்ச்சியையும் தாங்கும் வகையில் அவற்றை வலுப்படுத்தவும் தமிழக அரசு திட்டமிட்டுள்ளது.
மேலும் அரசு ரூ.28,508 கோடி முதலீட்டில் சுமார் 83,000 பேருக்கு வேலைவாய்ப்பு அளிக்கும் வகையில் 49 சாத்தியமான திட்டங்களுக்கான புரிந்துணர்வு ஒப்பந்தங்களில் கையெழுத்திட்டுள்ளது. விவசாயிகளுக்கு உதவும் வகையில் ஆறு, ஏரி, குளங்களை சீரமைப்பது போன்ற பல்வேறு நீர் பாதுகாப்பு முயற்சிகளையும் அரசு முழு முனைப்போடு செய்து வருகிறது. கிட்டத்தட்ட 20.7 மில்லியன் குடும்பங்கள் ஒவ்வொன்றும் ஏறத்தாழ ரூ.2.6 லட்சம் கடனில் இருக்கின்றனர், அவர்களுக்காக அரசு பல்வேறு நலத்திட்டங்களை செயல்படுத்த போகிறது. நிதியை திறம்பட நிர்வகிப்பதற்கு உதவும் வகையில், சொந்தமாக பணம் செலுத்தும் வங்கியை அமைக்க அரசு ஆர்வமாக உள்ளது.