விஜய் திவாஸ் – வரலாற்றுப் பின்னணி

புதுடெல்லி: இந்திய ராணுவம், பாகிஸ்தான் ராணுவத்தை வெற்றி கொண்ட தினத்தையே விஜய் திவாஸ் என்ற பெயரில் நமது ராணுவம் ஆண்டுதோறும் கொண்டாடி வருகிறது. இதன் வரலாற்றுப் பின்னணி குறித்து தற்போது பார்ப்போம்.

இந்தியா சுதந்திரம் பெறுவதற்கு ஒரு நாள் முன்பாக 1947 ஆகஸ்ட் 14ம் தேதி பாகிஸ்தான் சுதந்திரம் பெற்றபோது அது மேற்கு பாகிஸ்தான், கிழக்கு பாகிஸ்தான் என இருந்தது. இன்றைய வங்கதேசமே அன்று கிழக்கு பாகிஸ்தானாக இருந்தது. மேற்கு பாகிஸ்தானின் பாகுபாடு, அடக்குமுறை ஆகியற்றால் பாதிக்கப்பட்ட கிழக்குப் பாகிஸ்தான், மேற்கு பாகிஸ்தானில் இருந்து விடுதலை பெற விரும்பியது. அதற்காகப் போராடியது. வங்கதேச தந்தை என போற்றப்படும் சேக் முஜிபுர் ரகுமான், 1971ம் ஆண்டு மார்ச் 26ம் தேதி கிழக்கு பாகிஸ்தான் தனி நாடாக பிரியும் என அறிவித்தார். அதோடு, கிழக்கு பாகிஸதான் ராணுவத்தைச் சேர்ந்த ராணுவ வீரர்களைக் கொண்டு முக்தி வாகினி எனும் படை அமைக்கப்பட்டது.

இதையடுத்து, கிழக்கு பாகிஸ்தானுக்கு எதிராக கடும் அடக்குமுறைகளை மேற்கொண்டது மேற்கு பாகிஸ்தான் ராணுவம். தங்களின் விடுதலைக்கு உதவுமாறு இந்தியாவிடம் கிழக்குப் பாகிஸ்தான் மார்ச் 26, 1971ல் முறைப்படி கோரிக்கை விடுத்தது. அப்போதைய பிரதமர் இந்திரா காந்தி, கிழக்குப் பாகிஸ்தானின் கோரிக்கைக்கு ஆதரவு தெரிவித்தார். அப்போது பாகிஸ்தானின் அதிபராக இருந்தவர் ராணுவத் தளபதியாக இருந்த அயூப் கான். கிழக்கு பாகிஸ்தானில் சுதந்திரத்திற்கான போராட்டம் தீவிரமடைந்த நிலையில், மக்களுக்கு எதிராக தாக்குதலை நிகழ்த்தியது ராணுவம். கிழக்குப் பாகிஸ்தானின் நிலம்தான் வேண்டும்; மக்கள் அல்ல என்ற கொள்கையை பின்பற்றுமாறு ராணுவத்திற்கு உத்தரவிடப்பட்டது. இதனால் ஏராளமான அப்பாவி மக்கள் கொல்லப்பட்டனர்.

பாகிஸ்தானுக்கு எதிராக இந்தியா தாக்குதல் நடத்தக்கூடும் என எண்ணிய அயூப் கான், மேற்கு பாகிஸ்தானின் பாதுகாப்பிற்காக கூடுதல் படைகளை நிறுத்தினார். அதோடு, 1971ம் ஆண்டு டிசம்பர் 3ம் தேதி பாகிஸ்தான் விமானப்படை, இந்திய விமானப்படையின் 11 நிலைகளைக் குறிவைத்து தாக்குதல் நடத்தியது. இதையடுத்து, வங்கதேச விடுதலைக்கு உதவுவதாக அறிவித்த பிரதமர் இந்திரா காந்தி, பாகிஸ்தான் ராணுவத்துக்கு எதிரான போரை தொடங்கினார். இந்தியாவின் முப்படைகளும் களத்தில் இறங்கி பாகிஸ்தான் ராணுவத்தை நிலைகுலையச் செய்தன. ஒரு பக்கம் மேற்கு பாகிஸ்தானை குறிவைத்தும், மற்றொரு பக்கம் கிழக்குப் பாகிஸ்தானை குறிவைத்தும் இந்திய ராணுவம் தாக்குதல் நடத்தியது. இந்திய ராணுவத்தை எதிர்கொள்ள முடியாததால், பாகிஸ்தான் ராணுவம் கிழக்கு பாகிஸ்தானில் தனது 93 ஆயிரம் படையினருடன் இந்திய ராணுவத்திடம் சரணடைந்தது. இதற்கான ஒப்பந்தத்தில், 1971, டிசம்பர் 16ம் தேதி பாகிஸ்தானின் ராணுவத் தளபதி அமிர் அப்துல்லா கான் நியாசி கையெழுத்திட்டார். இதன் காரணமாக 13 நாட்களில் போர் முடிவுக்கு வந்தது. கிழக்குப் பாகிஸ்தான் சுதந்திரம் பெற்றது. பிறகு அது தன்னை வங்கதேசமாக அறிவித்துக்கொண்டது.

பாகிஸ்தான் ராணுவத்தை இந்திய ராணுவம் வெற்றி கொண்ட நாளே விஜய் திவாஸ் என ஆண்டுதோறும் கொண்டாடப்படுகிறது. இந்த வெற்றியை அடுத்து, பிராந்தியத்தின் மிகப் பெரிய சக்தியாக இந்தியாவை உலக நாடுகள் பார்க்கத் தொடங்கின. இந்த நாளை வங்கதேசம் தனது சுதந்திர தினமாக ஆண்டுதோறும் கொண்டாடி வருகிறது.

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.