1991-ஆண்டு ஜூலை மாதம், உத்தரப்பிரதேசத்தில் 10 காலிஸ்தானி பயங்கரவாதிகள் சுட்டுக் கொல்லப்பட்டதாக அந்த மாநிலக் காவல்துறை அறிவித்தது. ஆனால், இது திட்டமிடப்பட்ட படுகொலை என புகார்கள் எழவே, இது தொடர்பாக வழக்கு பதிவுசெய்யப்பட்டு விசாரணை மேற்கொள்ளப்பட்டது. அதில், உ.பி போலீஸார் 1991-ம் ஆண்டு ஜூலை 12 அன்று, சீக்கிய யாத்ரீகர்களை ஏற்றிச் சென்ற சொகுசு பேருந்தை தடுத்து நிறுத்தி, அதிலிருந்து 10 பேரை கீழ இறக்கியது தெரியவந்தது. பின்னர், அவர்களை காட்டுப்பகுதிக்கு அழைத்துச் சென்று சுட்டுக் கொன்றதாக பகீர் தகவல் வெளியானது. அதனடிப்படையில் 47 உ.பி போலீஸார் மீது குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டு, விசாரணை தீவிரப்படுத்தப்பட்டது.
பின்னர் உச்ச நீதிமன்றத்தின் உத்தரவின்பேரில் சிபிஐ இந்த வழக்கை விசாரித்தது. அதைத் தொடர்ந்து சிபிஐ நீதிமன்றத்துக்கு விசாரணைக்கு வந்த இந்த வழக்கில், “பயங்கரவாதிகளைக் கொன்றதற்காக விருதுகளையும், அங்கீகாரத்தையும் பெறுவதே கொலைகளின் பின்னணியாக இருப்பது தெரியவந்திருக்கிறது” எனக் கூறிய சி.பி.ஐ நீதிமன்றம், 47 காவலர்களுக்கு ஆயுள் தண்டனை விதித்து தீர்ப்பளித்தது. அதற்கு பிறகு குற்றம்சாட்டப்பட்ட உத்தரப்பிரதேச காவல்துறை அதிகாரிகள், தங்களுக்கு விதிக்கப்பட்ட தண்டனையை எதிர்த்து உயர் நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்தனர். இதற்கு இடைப்பட்ட காலத்தில், நான்கு பேர் உயிரிழந்துவிட்டனர்.
இந்த நிலையில், மேல்முறையீட்டு வழக்கு அலகாபாத் உயர் நீதிமன்றத்தின் லக்னோ பெஞ்ச்சில் வியாழனன்று விசாரணைக்கு வந்தது. அப்போது நீதிபதிகள், “1991-ல் காலிஸ்தானி பயங்கரவாதிகள் என்ற சந்தேகத்தில் குற்றம்சாட்டப்பட்டவர்களையோ அல்லது குற்றவாளிகளையோ கொல்வது காவல்துறை அதிகாரிகளின் கடமை அல்ல. சந்தேகத்துக்கு இடமின்றி, காவல்துறை குற்றம்சாட்டப்பட்டவர்களைக் கைதுசெய்து விசாரணைக்கு உட்படுத்த வேண்டும்.
தற்காப்புக்காக பத்து பயங்கரவாதிகளை கொன்றதாக மேல்முறையீடு செய்தவர்களின் கூற்று மருத்துவ ஆதாரங்களுடன் உறுதிப்படுத்தப்படவில்லை. எனவே, நீதிமன்றம், நீதிக்குப் புறம்பான கொலையில் 10 பேரை சுட்டுக் கொன்றதற்காக 43 உத்தரப்பிரதேச காவல்துறையினருக்கு ஏழு ஆண்டுகள் கடுங்காவல் சிறைத் தண்டனை விதித்து தீர்ப்பளிக்கிறோம்” எனத் தெரிவித்தனர்.