மதுராந்தகம் அருகே, அதிமுக கொடி கம்பம் விழுந்து ஒருவர் உயிரிழந்த விவகாரத்தில் 2 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
செங்கல்பட்டு மாவட்டம் சென்னை- திருச்சி தேசிய நெடுஞ்சாலையில் மதுராந்தகம் நெடுஞ்சாலையோரத்தில் கடந்த 7 மாதங்களுக்கு முன்பு முன்னாள் முதல்வர் எடப்பாடி பழனிசாமி 100 அடி உயரம் கொண்ட அதிமுக கம்பத்தில் கொடி ஏற்றி வைத்திருந்தார்.
அந்த கொடி கம்பம் சேதம் அடைந்திருந்தது. அதை மாற்ற நேற்று ராட்சத கிரேன் மூலம் கொடிக் கம்பத்தை கழற்றி மீண்டும் பொருத்தும் பணி நடைபெற்றது. கொடிகம்பம் நிலை நிறுத்தும்போது இரண்டாக உடைந்து பணியில் ஈடுபட்டு கொண்டிருந்த அதிமுக தொண்டரான மதுராந்தகம் சூரக்கோட்டை பகுதியை சேர்ந்த செல்லப்பன் (40) மீது விழுந்தது.
இதில் செல்லப்பன் படுகாயம் அடைந்து சம்பவ இடத்திலேயே பரிதாபமாக இறந்தார். பலியான செல்லப்பனுக்கு மனைவியும், 2 மகன்களும் உள்ளனர். இந்த விபத்து குறித்து மதுராந்தகம் போலீசார் வழக்குப் பதிவுசெய்து விசாரித்து வருகின்றனர்.
இந்த நிலையில், மதுராந்தகத்தில் அதிமுக கொடிக் கம்பம் விழுந்து ஒருவர் உயிரிழந்த விவகாரத்தில் அதிமுக நிர்வாகி சரவணன் மற்றும் கிரேன் ஓட்டுநர் கோபிநாத் ஆகியோரை போலீசார் இன்று கைது செய்தனர்.