பயங்கரவாதத்தின் மையமாக பாக்.,-ஐ பார்க்கும் உலக நாடுகள்: ஜெய்சங்கர்| Dinamalar

ஐக்கிய நாடுகள்: உலக நாடுகள், பாகிஸ்தானை பயங்கரவாதத்தின் மையமாக பார்த்து வருகின்றன என மத்திய வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கர் கூறியுள்ளார்.

ஐக்கிய நாடுகள் சபை பொதுக்கூட்டத்தில் பங்கேற்ற பிறகு, மத்திய வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கர், பத்திரிகை நிருபர்களை சந்தித்தார்.

அப்போது, பாகிஸ்தான் வெளியுறவுத்துறை இணை அமைச்சர் ஹீனா ரப்பானி, இந்தியாவை விட பயங்கரவாதத்தை சரியாக கையாளும் நாடு வேறு எதுவும் கிடையாது எனக்கூறியது தொடர்பாக ஜெய்சங்கர் கூறியதாவது:

கோவிட் பெருந்தொற்றின் தாக்கத்தால், இரண்டு ஆண்டுகளாக , கோவிட் தாக்கத்தால் பல விஷயங்களை உலகம் மறந்துவிட்டது உண்மை. அதற்காக பயங்கரவாதத்தின் மையமாக பாகிஸ்தான் திகழ்ந்து வருவதை மறந்துவிடவில்லை.

தெற்கு ஆசியாவில் மட்டுமின்றி உலகம் முழுவதும் நிகழ்ந்த பயங்கரவாத செயல்களில் பாகிஸ்தானின் பங்கு இருப்பது சிறு குழந்தைக்கு கூட தெரியும். அதனால், இப்படிப்பட்ட குற்றச்சாட்டுகள் மூலம் பாகிஸ்தான் மீதான ரத்தக்கறையை துடைத்துவிட முடியும் என தப்புக்கணக்கு போடாதீர்கள்.

10 ஆண்டுகளுக்கு முன்பு பாகிஸ்தான் வந்த அப்போதைய அமெரிக்க வெளியுறவுத்துறை அமைச்சர் ஹிலாரி கிளிண்டன், கூறியது உங்களுக்கு மறந்துவிட்டதா? வீட்டின் கொல்லைபுறத்தில் பாம்புகள் வளர்ப்பதால், அது அண்டை வீட்டுக்காரர்களை மட்டும் கடிக்கும் என நினைக்க வேண்டாம். அது வளர்த்தவர்களையும் ஒரு நாள் கடிக்கும் என்பதையும் பாகிஸ்தான் மறந்துவிட வேண்டாம்” ஹிலாரி கிளிண்டன் கூறினார். அவர் அப்படி கூறும்போது, பக்கத்தில் நின்றவர் ஹீனா ரப்பானிதான்.

இந்த உலகத்திற்கே பாகிஸ்தான் யார், அது என்ன செய்து கொண்டுள்ளது என்பது எல்லாருக்கும் தெரியும். மற்ற நாடுகள் மீது பழி சுமத்துவதன் மூலம் பாகிஸ்தானை யாரும் நல்லவர்கள் என நினைக்க மாட்டார்கள். உங்களை நீங்கள் சுத்தம் செய்யுங்கள். இவ்வாறு அவர் கூறினார்.

பிறகு பாகிஸ்தான் நிருபர் ஒருவர், இன்னும் எத்தனை காலத்திற்கு தான் டில்லியில் இருந்து வரும் பயங்கரவாதத்தை பாகிஸ்தான் மற்றும் காபூல் பார்க்க போகிறது என கேள்வி எழுப்பினார்.

அதற்கு ஜெய்சங்கர் அளித்த பதில்: நீங்கள் தவறான அமைச்சரிடம் கேள்வி கேட்கிறீர்கள் என்பது உங்களுக்கே தெரியும். இதனை எத்தனை காலத்திற்கு இதனை செய்ய போகிறீர்கள். இன்னும் எத்தனை காலத்திற்கு தான் பயங்கரவாதத்தை பாகிஸ்தான் தூக்கி பிடிக்க போகிறது என்பதை பாகிஸ்தான் அமைச்சர் தான் சொல்லுவார்.

உலகம் முட்டாள் இல்லை. உலக நாடுகள் எதையும் மறந்துவிடவில்லை. பயங்கரவாதத்தை ஊக்குவிக்கும் மற்றும் ஆதரிக்கும் நாடுகளை உலக நாடுகள் அறிந்தே வைத்துள்ளன.

ஒரு நல்ல அண்டை நாடாக இருக்க முயற்சி செய்யுங்கள். பயங்கரவாதத்தில் இருந்து வெளியே வாருங்கள். சர்வதேச தளத்தில் பயங்கரவாதம் குறித்து பேசிவிட்டு, பாகிஸ்தானால், எங்கும் ஒழிந்துவிட முடியாது. வளர்ச்சி, அமைதி, பொருளாதார வளர்ச்சிக்கு உலக நாடுகளின் பணிக்கு உங்களின் பங்களிப்பை அளியுங்கள். இவ்வாறு ஜெய்சங்கர் பதிலளித்தார்.


புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.