கும்பகோணம்: கும்பகோணம் ஒன்றியத்தில் திமுக ஒன்றியக் குழுத் தலைவியின் கணவருடைய தலையீடு உள்ளிட்ட விவகாரங்களைக் கண்டித்து திமுக, அதிமுகவினர் வெளிநடப்பு செய்தனர்.
கும்பகோணம் ஒன்றியத்தில் 18 திமுக, 7 அதிமுக, பாமக மற்றும் பாஜக தலா 1 என 27 உறுப்பினர்கள் உள்ளனர். திமுகவைச் சேர்ந்த அ.காயத்ரி தலைவராகவும், டி.கணேசன் துணைத் தலைவராகவும் உள்ளனர். இந்நிலையில், ஒன்றியக் குழுக் கூட்டம் இன்று வட்டார வளர்ச்சி அலுவலக கூட்டரங்கில் நடைபெற்றது. இதில் தலைவர் அ.காயத்ரி தலைமை வகித்தார். துணைத் தலைவர் டி.கணேசன், வட்டார வளர்ச்சி அலுவலர்கள் பூங்குழலி, சூரிய நாராயணன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். கூட்டத்தில் பேசிய அதிமுக உறுப்பினர் அ.சசிகலா, “வார்டுகளிலுள்ள பணிகளை அந்த வார்டு உறுப்பினர்கள் கூறுபவர்களுக்கு வழங்க வேண்டும், ஆனால் இங்கு, தங்களுக்கு வேண்டிய 2 பேருக்கு மட்டும் ஒரு தலைப்பட்சமாக ஒன்றியத்திலுள்ள அனைத்து பணிகளும் வழங்கப்பட்டுள்ளது. எனவே, ஒப்பந்தத்தில் முறைகேடு செய்து வரும் ஒன்றிய நிர்வாகத்தைக் கண்டித்து, நாங்கள் வெளிநடப்பு செய்கின்றோம்” என்றார்.
அதன்பின் அலுவலக வாயில் முன், “கடந்த கரோனா காலத்தில் ருமாங்கோ நிறுவனம் என்ற பெயரில் ரூ.90 லட்சம் ஊழலுக்குத் துணை போன வட்டார வளர்ச்சி அலுவலரை மீண்டும் பணியமர்த்தியதை கண்டிக்கிறோம். அவரை இடமாற்றம் செய்ய வேண்டும்” அதிமுக உறுப்பினர்கள் கண்டன முழக்கமிட்டனர்.
திமுக துணைத் தலைவர் டி.கணேசன், “கும்பகோணம் ஒன்றியத்தில் ஒன்றியக் குழுத் தலைவியின் கணவரின் அதிக தலையீடு அதிகமாக உள்ளது. வட்டார வளர்ச்சி அலுவலரும், அவரும் சர்வாதிகாரியாகச் செயல்படுகிறார்கள். ஜீப் ஒட்டுநருக்கு பணி வழங்காததால், ஒன்றியத்திலுள்ள பெரும்பாலான பணிகள் முடங்கி கிடக்கிறது” என்று கூறி, இவற்றைக் கண்டித்து தனது ஆதரவு உறுப்பினர்களுடன் வெளிநடப்பு செய்தார்.
இது குறித்து திமுக உறுப்பினர்கள் கூறும்போது, “ஒன்றியக் குழுத்தலைவியின் கணவர் மற்றும் வட்டார வளர்ச்சி அலுவலரைக் குறித்து தமிழக முதல்வர், மாவட்டச்செயலாளர், எம்பி, எம்எல்ஏக்களிடம் பாதிப்புக்குள்ளான உறுப்பினர்கள் சேர்ந்து புகாரளிக்க உள்ளோம். இது குறித்து நடவடிக்கை மேற்கொள்ளாவிட்டால், தமிழக முதல்வரை நேரில் சந்தித்து முறையிட உள்ளோம்” எனத் தெரிவித்தனர்.
இது குறித்து வட்டார வளர்ச்சி அலுவலர் பூங்குழலி கூறும்போது, “துணைத் தலைவர் மட்டும் வெளியில் சென்றார். மற்ற உறுப்பினர்கள் அனைவரும் கூட்டரங்கிலேயே அமர்ந்திருந்தனர்” எனத் தெரிவித்தார்.