Yescon 2023: பிசினஸில் ஜெயிக்க இதெல்லாம் முக்கியம்… வழிகாட்டிய தொழிலதிபர்கள்!

இளம் தொழில்முனைவோர்களுக்கு வழிகாட்டும் அமைப்பான ‘யெஸ்’ அமைப்பு (YES – Young Entrepreneurs School) ஆண்டுதோறும் மதுரையில் பெரிய அளவில் கருத்தரங்கம் நடத்துவது வழக்கம். இந்த ஆண்டு நடந்த ‘YESCON 2023’ கருத்தரங்கம் “அறிவோம் ஆயிரம்” என்ற தலைப்பில் நடத்தப்பட்டது. இதில் தமிழகம் முழுக்க ‘யெஸ்’ அமைப்பின் உறுப்பினராக இருக்கும் தொழில்முனைவோர்கள் மற்றும் தொழிலதிபர்கள் கலந்துகொண்டு அவர்களின் தங்கள் அனுபவங்களைப் பகிர்ந்துகொண்டனர்.

எமரால்டு ஜூவல்லரி குழுமத்தின் தலைவர் கே. ஸ்ரீனிவாசன்

இந்தக் கருத்தரங்கில் முதலில் பேசிய எமரால்டு ஜூவல்லரி குழுமத்தின் தலைவர் மற்றும் நிர்வாக இயக்குனரான கே. ஸ்ரீனிவாசன், ‘‘ஒரு சிறந்த தொழில்முனைவோருக்கு மிக முக்கியம்,  நல்ல உடல்நிலை மற்றும் மனநிலையே ஆகும். இந்த இரண்டும்தான் வெற்றிகரமான தொழிலுக்கான  சிந்தனையைத் தெளிவாக்கி, வெற்றிப்பாதைக்கு அழைத்துச் செல்லும்.

“பிறந்தோம் வாழ்ந்தோம் இறந்தோம்” என்று வாழ்வதைவிட “பிறந்தோம், வாழ்ந்தோம், சாதித்தோம், இறந்தோம்” என வாழவேண்டும் என்று நினைத்து அதை நோக்கியே பயணித்துக் கொண்டிருக்கிறேன். நிச்சயம் என் இலக்கை அடைவேன். 

என்னுடைய வாழ்க்கையில் வழிகாட்டி என்று சொல்ல கிட்டத்தட்ட 40-50 தொழில் வல்லுனர்கள் இருப்பார்கள். நாள் தனி ஆளாக இந்த அளவிற்குப் பெரிதாக வளரவில்லை. எனக்குப் பின்னால் ஒரு படையே இருக்கிறது. மேலும். சரியான அறிவுரைகளையும் சரியான வல்லுனர்களையும் தேர்ந்தெடுப்பது முக்கியம். அவர்கள் கூறும் அறிவுரைகளை அப்படியே எடுத்துக்கொள்ளாமல் நாம் சிந்தித்து செயல்படுத்த வேண்டும். அறிவுரைகளைப் பெற்றுக்கொண்டு சரியான முடிவுகளை நாம் சிந்தித்து எடுக்க வேண்டும் அதுவே முக்கியம்’’ என அவர் கூறினார்.

 அடுத்து, முருகப்பா குடும்பத்தின் மூத்த தலைவர் மற்றும் முருகப்பா குழுமத்தின் முன்னாள் செயல் தலைவரான எம்.வி. சுப்பையா பேசத் தொடங்கினார். இந்தக் கலந்துரையாடலை ஹாட்சன் அக்ரோ தயாரிப்புகளின் நிர்வாக இயக்குனர் ஆர்.ஜி. சந்திரமோகன் தொகுத்து வழங்கினார்.

கைபழகுவது என்றால் என்ன..?

‘‘எங்களுக்கு கொழும்புவில் எங்களுடைய வட்டிக் கடை இருந்தது. அப்போது எனக்கு 10 வயது. என்னோட பெரியப்பா என்னைக் கூப்பிட்டு ‘‘அங்கு போய் கை பழகிட்டுவா’’ என்று கொழும்புவிற்கு அனுப்பி வைத்தார். அங்கே என்னைக் கூப்பிட்டு ‘போயி வெத்தலை பாக்கு வாங்கிட்டுவா’ என கூறினார்கள். ஒரு மணிநேரம் கழித்து வாங்கிகொண்டு வந்தேன். ‘‘பாஷை  தெரியாத ஊருல எப்படி வெத்தலை பாக்கு வாங்கிட்டு வந்த?’’ எனக் கேட்டார்கள் “ரோட்டுல ஒருத்தர் வெத்தலை பாக்கு போட்டுட்டு போயிட்டு இருந்தாரு. அவர்கிட்ட எங்க வாங்குனிங்கனு கேட்டு வாங்கிட்டு வந்தேன்’’ என கூறினேன், இதுவே நான் என் வாழ்நாளில் பார்த்த முதல் வேலை. கைபழகுவது என்பது ஒரு தொழிலை பற்றி நன்றாக தெரிந்துகொள்வது.

முருகப்பா குடும்பத்தின் மூத்த தலைவர் எம்.வி. சுப்பையா

கணக்கை சரி செய்த பிறகே எனக்கு சாப்பாடு…

காசாளரக இருக்கும்போது ஒருநாள் கணக்கில் ஏதோ தவறு செய்துவிட்டேன். கணக்கில் பணம் குறைந்துவிட்டது. அந்தக் கணக்கை சரிசெய்து என்ன தவறு செய்திருக்கிறேன் எனக் கண்டுபிடித்து காண்பித்த பிறகே எனக்கு சாப்பாடு என்று கூறினார்கள். இன்றைய இளைஞர்கள் பாராட்டுவதும், பரிசு வாங்குவது மட்டுமே மோட்டிவேஷன் என்று நினைக்கிறார்கள். ஆனால் தவறுக்கு தண்டனை கொடுப்பதும் ஒருவகையிலான மோட்டிவேஷன்தான். அடிக்கிற கைதான் அணைக்கும்!

ஈ.ஐ.டி பாரியில் தனது அனுபவங்களை பற்றி கூறத் தொடங்கிய எம்.வி. சுப்பையா, ‘‘வயது முதிர்ச்சி காரணமாக எனக்கு நிறைய விஷயங்கள் மறந்துவிட்டன. என் சார்பில் நீங்களே சொல்லுங்கள்’’ என்று சந்திரமோகனிடம் சுப்பையா கூற, சுப்பையா சார்பில் சந்திரமோகன் பேசத் தொடங்கினார்.

‘‘ஈ.ஐ.டி பாரியில் முதன்முதலில் சர்க்கரைத் தொழிற்சாலைக்குப் போகும்போது சுப்பையா தனது டிரைவரிடம் கேள்வி கேட்டுக்கொண்டே இருந்திருக்கிறார். இவர் கேட்ட அனைத்துக் கேள்விகளுக்கும் அந்த டிரைவர் ஒரே வரியில் பதில் சொல்லிக்கொண்டே இருந்திருக்கிறார். ‘‘உன் வயசு என்ன’’ என்று கேட்டதற்கு ‘36’ என்று சொல்லி இருக்கிறார். ‘‘எத்தன வருஷமா வண்டி ஓட்டுறீங்க’’ என்று கேட்க, ‘10’ என ஒரு வரியில் பதில் சொல்லிக்கொண்டே வந்தார்.

ஹாட்சன் அக்ரோ தயாரிப்புகளின் நிர்வாக இயக்குனர் ஆர்.ஜி. சந்திரமோகன்

சாப்பிடுவதற்காக மாமண்டூரில் ஒரு இடத்தில் காரை நிறுத்திவிட்டு, ‘‘சாப்பிட்டு முடித்தபிறகு எனக்கும் சேர்த்து நீயே பணம் குடுத்துவிடு’’ என்று டிரைவரிடம் சொல்லி இருக்கிறார். டிரைவரும் பணத்தைக் கொடுத்த விட்டு மீண்டும் பயணத்தைத் தொடங்கியபோது, அதுவரை ஒரு வரியில் மட்டுமே பேசிய டிரைவர் இவருக்கும் சேர்த்து பணத்தைக் கொடுத்ததும், “சார், நாட்டுல நெறய பேர் ஊழல் பண்றாங்க சார். நானும் ஒரு காலத்துல பெட்ரோல் திருடிருக்கிறேன். இனிமே திருட மாட்டேன் சார்” என ஊழல் செய்பவர்களையும் திருடுபவர்களையும் பற்றி பேசிக்கொண்டு வந்தார். ஒருநாள்  நிறுவனத்தை எப்படி சரி செய்தீர்கள் என்று ஒருவர் கேட்ட கேள்விக்கு, ‘‘நான் எங்க சரி செய்தேன்? அந்த டிரைவர்தான் சரி செய்தார் என்று சுப்பையா கூறியதாக சந்திரமோகன் சொல்ல, அனைவரும் கைதட்டி ரசித்தனர். 

தொழிலாளியிடம் மன்னிப்புக் கேட்டேன்..!

ஒருநாள் இரவு ஷிப்டில் வேலை பார்த்த ஒரு தொழிலாளி தூங்குவதைப் பார்த்து, “என்னடா பாக்ட்ரிக்கு வந்து வேலை பார்க்காம செரைக்கிரியா” என்று கேட்டேன் அது பெரிய பூதாகரமாக வெடித்தது. அனைத்துத் தொழிலார்களும் வேலையை நிறுத்திவிட்டு ஸ்ட்ரைக் செய்தனர். நீங்கள் எங்களிடம் மன்னிப்பு கேட்டால்தான் வேலையைத் தொடங்குவோம் என்று கோபமாக கூறினார்கள். அப்போது நான் யாரைத் திட்டினேனோ, அந்த தொழிலாளியை மட்டும் கூப்பிட்டு ‘என்னை மன்னித்துவிடுங்கள்’ என்று கூறினேன், அதுவே எனக்கு சரியாகப்பட்டது. அனைவரிடமும் மன்னிப்பு கேட்க வேண்டிய அவசியம் இல்லை என நினைத்தேன்.

‘YESCON 2023’ கருத்தரங்கம்

அரசியல் ஒரு சாக்கடை..!

ஈ.ஐ.டி பாரியில் இருந்தபோது விவசாயிகளிடமிருந்து கொள்முதல் செய்த பொருள்களுக்கு முதல் மூன்று மாதங்களுக்குப் பணம் கொடுக்கவில்லை அப்போது பணத்தைக் கொடுத்தால்தான் நாங்கள் பொருள்களைத் தருவோம் என்று ஆவேசமாக பேசியவர்கள் பின்னாளில் என்னைத் தேர்தலில் போட்டியிட சொன்னார்கள். “நீங்க தேர்தல்ல நில்லுங்க; நாங்க உங்களை ஜெயிக்க வைக்கிறோம்” என்று கூறினார்கள். அப்போது என் கையில் இருந்த தண்ணீர் கேனை எடுத்துக் கொண்டு பக்கத்தில் இருந்த சாக்கடையில் ஊற்றி கூறினேன் “நான் அரசியலுக்கு வந்து எதுவும் மாறப்போறதில்லை அப்படி வந்தாலும் சாக்கடையோடு சாக்கடையாக கலந்துவிடுவேன். அதனால் சாக்கடை சாக்கடையாகவே இருக்கட்டும். நான் கேன் தண்ணீராகவே இருந்துக்குறேன்” என்று சுப்பையாவின் நினைவுகள் பற்றி சந்திரமோகன் எடுத்துச் சொல்லச் சொல்ல, பார்வையாளர்கள் கைதட்டிப் பாராட்டினர்.

இன்றைய பெற்றோர்கள் ஆசைப்படும் பொருள்களை எல்லாம் வாங்கித் தருகிறார்கள். அதை மாற்றிக்கொள்ள வேண்டும். குழந்தைகள் அவர்களுக்குத் தேவையானவற்றை அவர்களே வாங்கிகொள்ளவது போல வளர்க்க வேண்டும். கொடுக்கும் பரிசுப் பொருள்கள் அவர்கள் எதாவது சாதித்தபிறகு அவர்களை மேலும் ஊக்கப்படுதுவதாகவே இருக்க வேண்டும்’’ என்றார்.

பின்னர் பேசிய ஆச்சி நிறுவனத்தின் தலைவர் மற்றும் நிர்வாக இயக்குனர் ஏ.டி. பத்மசிங் ஐசக் அவரின் அனுபவங்களையும் தொழிலில் வெற்றியடைவதற்கான வழிமுறைகளையும் எடுத்துக் கூறுகையில்…

நான் தொழில்முனைவோராக மாறுவதற்கு இதுதான் காரணம்…!

நான் கோத்ரெஜ் நிறுவனத்தில் பத்து ஆண்டுகள் வேலைப் பார்த்தேன், ஒரு நாள் எனக்கு புரமோஷன் இருக்கானு கேட்டபோது இருப்பதை வைத்து சந்தோசமாக இருக்க பழகிக்கொள் என்று கூறினார்கள். அப்போது முடிவு செய்தேன், தனியாக தொழில் தொடங்க வேண்டும் என்று. அடுத்த நாளே என் நிறுவனத்தைப் பதிவு செய்தேன்.

முதலில், சோப்பு மற்றும் சோப்பு பொருள்களை தயாரித்து விற்பனை செய்தேன். பின்பு மசாலா பொருள்களில் நாம் தொழில் தொடங்குவோம் என யோசித்துதான் ஆச்சி நிறுவனத்தைப் பதிவு செய்து முதன்முதலில் ஆச்சி குழம்பு மிளகாய் என்பதை அறிமுகம் செய்தேன்.

ஆச்சி மசாலா | ஏ.டி. பத்மசிங் ஐசக்

கோத்ரெஜ் நிறுவனத்தில் வேலை பார்த்த பத்து ஆண்டுகள் என் திறமையை வளர்த்துக்கொள்ள  உண்மையில் எனக்கு ஒரு நல்ல வாய்ப்பாக அமைந்தது. ஆனால் தொழில்முனைவோராக மாறியபின் பல இன்னல்களை சந்தித்தேன். என் தயாரிப்பு பொருளை நான் சந்தையில் கூவிக்கூவி விற்றேன். என் மீதும் நான் தயாரித்த பொருளின் மீதும் நான் வைத்த நம்பிக்கையே இன்று 2500 கோடி ரூபாய் பிசினஸாக மாறியுள்ளது.

நான் தயாரித்த பொருளின் மீது  நம்பிக்கை வைத்து 5 ஆண்டுகள் பல சிரமங்களைத் தாண்டி கடுமையக உழைத்தேன். அதன் விளைவாக நான் நம்பிய என் தயாரிப்பு பொருளே இன்று என்னுடைய பிசினஸில் 300 பொருள்களை உருவாக்கி இருக்கிறது.

பணம் இருந்தால் மட்டும்தான் தொழில் தொடங்க முடியுமா?

பணம் இருந்தால் மட்டும்தான் தொழில் தொடங்கி பெரிதளவில் சாதிக்க முடியும் என்பதை நான் ஏற்றுக்கொள்ள மாட்டேன். நான் தொழில் தொடங்கும்போது எனது முதலீடு 80,000 மட்டுமே; அதை வைத்துக்கொண்டு சின்ன இடத்தில் பத்துக்கு பத்துக்கு ரூமில் சின்ன அளவில் எனது தொழிலை ஆரம்பித்தேன். இன்று 3.5 லட்சம் சதுர அடி உற்பத்தி ஆலை வைத்திருக்கிறேன். உலக அளவில் 62 நாடுகளில் கொடிக்கட்டிப் பறக்கிறோம், ஆகையால் பணம் மட்டுமே முக்கியம் இல்லை நாம் செய்யும் தொழிலின்மேல் நமக்குள்ள நம்பிக்கை, நாம் தயாரிக்கும் பொருளின் மீது நாம் வைக்கிற நம்பிக்கை, திறமை, கடுமையான உழைப்பு இவை அனைத்தும் இருந்தாலே கண்டிப்பாக ஜெயிக்கலாம்.

வீட்டில் சமையல் செய்பவர்களே என்னுடைய போட்டியாளர்…

 வீட்டில் சமையல் செய்பவர்களே என்னுடைய போட்டியாளர்கள் ஏனென்றால் அவர்கள் நன்றாக சமையல் செய்வார்கள். ஆனால், அவர்களின் சமையலைவிட என்னுடைய மசாலா சுவையாக இருக்க வேண்டும் அப்போதுதான் நான் ஜெயித்ததாக அர்த்தம்.

குப்பைத்தொட்டியைக்கூட விடமாட்டேன்…

சாலைகளில் செல்லும்போது குப்பைத்தொட்டியில் என்னுடைய மசாலவின் காலி பாக்கெட்டுகள் கிடக்கின்றனவா என்று ஒரு குப்பைத்தொட்டியை விடாமல் பார்ப்பேன். இதை ஒரு தொழில்முனைவோரின் நல்ல பண்புகளில் ஒன்றாக நினைக்கிறேன். தொழிலில் ரிஸ்க் எடுக்க எப்பொழுதுமே பயப்படாதீர்கள் எல்லா ரிஸ்கிலும் உங்களுக்கான ஒரு வாய்ப்பு ஒளிந்து இருக்கும்.

ஒரே நாளில் நின்ற 700 தொழிலாளர்கள்!

கொரோனா காலகட்டத்தில் ஒரே நாளில் என் நிறுவனத்தில் வேலை பார்த்த 700 வடஇந்திய தொழிலாளர்கள் நிறுவனத்தை விட்டு ஓடிவிட்டனர். பல நிறுவனங்கள் நஷ்டத்தில் போனதால் இழுத்து மூடிவிட்டுச் சென்றனர். எனக்கும் கொஞ்சம் பயமாகத்தான் இருந்தது. அப்போது நான் நம்பியது, என்னிடம் வேலை பார்த்த 3000 பெண் தொழிலாளர்களே, “எம்மா, உங்களை நம்பித்தான் நான் மீண்டும் இந்தத் தொழிலை ஆரம்பிக்கிறேன். இந்த நிறுவனத்தை விட்டு சென்று விடாதீர்கள்” என்று கூறினேன்.

நாங்கள் அனைவரும் சேர்ந்து கொரோனா காலகட்டத்தில் 24 மணிநேரம் வேலை செய்து தமிழ்நாடு முழுவதும் எங்களுடைய தயாரிப்புகளை கொண்டுச் சென்றோம் மேலும் கொரோனா காலத்தில் 30 புதிய தயாரிப்பு பொருள்களை சந்தையில் அறிமுகம் செய்தோம். “பொறுமையும் , திறமையும், சரியான திட்டமிடலும் இருந்தால் அனைவரும் தொழிலில் ஜெயிக்கலாம்” என்று அவர் கூறினார்.

தொழில்முனைவோர்களை ஊக்கப்படுத்தும் வகையில் இந்த YESCON 2023 நிகழ்ச்சி மிகவும் பயனுள்ளதாக அமைந்தது என்பது கலந்துகொண்ட அனைவரின் கருத்தாக இருந்தது.

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.