கரூர் மாவட்ட பஞ்சாயத்து துணைத்தலைவர் தேர்தலில் போட்டியிட்ட வேட்பாளர் திருவிகா கடத்தப்பட்டதாக தெரிவிக்கப்பட்ட நிலையில், திமுகவினர் தன்னை கடத்திச் சென்று 5 மணி நேரம் வைத்து அடித்து துன்புறுத்தியதாக தெரிவித்துள்ளார். அவர்களிடமிருந்து தப்பித்து திரும்பி வந்திருப்பதாக, வேட்பாளர் திருவிகா செய்தியார்களிடம் தெரிவித்துள்ளார்.
கரூர் மாவட்ட பஞ்சாயத்து துணைத் தலைவருக்கான தேர்தல், உயர்நீதிமன்ற மதுரைக்கிளை அனுமதியின் அடிப்படையில் இன்று பிற்பகல் நடைபெற இருந்தது. தேர்தல் சம்பந்தமான அனைத்து விவரங்களையும் சீலிட்ட கவரில் உயர் தாக்கல் செய்யவும், தேர்தலை முழுமையாக வீடியோ பதிவு செய்யவும், தேர்தல் முடிவுகள் வழக்கின் தீர்ப்புக்கு பின்னரே வெளியிட வேண்டும் என்றும் நீதிமன்றம் உத்தரவிட்டிருந்தது.
இந்நிலையில் தேர்தலில் போட்டியிடும் மனுதாரர் திருவிக்காவை சிறிது நேரத்திற்கு முன்பாக மர்ம நபர்கள் கடத்திச் சென்றுள்ளனர் என்றும், இது குறித்து காவல்துறையினரிடம் புகார் அளிக்கப்பட்டுள்ளது உள்ளதாகவும், மேலும் இந்த சம்பவம் தொடர்பாக கடத்தப்பட்ட வேட்பாளர் தரப்பு வழக்கறிஞர் நீதிபதிகள் கிருஷ்ணகுமார் மற்றும் விஜயகுமார் அமர்வு முன்பாக முறையீடு செய்து, தேர்தலுக்கு தடை விதிக்க வேண்டும் என்றும் கோரிக்க விடுத்தனர்.
அதற்கு பதிலளித்த நீதிபதிகள், `தேர்தல் முடிவுகள் தற்போது அறிவிக்கப்படாது. நீதிமன்றம் வழியாகவே முடிவு வரும் என்பதால், இது தொடர்பாக நிலுவையில் உள்ள வழக்கு 22 ஆம் தேதி விசாரணைக்கு வர உள்ளதால், அன்று பார்த்துக் கொள்ளலாம்’ என தெரிவித்திருந்தனர்.
இந்நிலையில் கடத்தப்பட்டதாக சொல்லப்பட்ட அதிமுக வேட்பாளர் திருவிகா சுமார் 5 மணி நேரத்திற்கு பிறகு திரும்பிவந்துள்ளார். சுமார் 5 மணி நேரத்திற்கு பிறகு திருவிகாவை கடத்திச் சென்ற நபர்கள் விட்டுவிட்டு ஓடிவிட்டதாக கூறப்படுகிறது. அங்கிருந்து மீட்கப்பட்ட அவர் திண்டுக்கல்லில் போலீசார் விசாரணை பிறகு கரூருக்கு வந்துள்ளார்.
பின்னர் கரூரில் அவர் செய்தியாளர்களிடம் கூறுகையில், “7 பேர் கொண்ட கும்பல் என்னை கடத்திச் சென்றனர். அவர்கள் மதுரை மாவட்டத்தை சேர்ந்தவர்கள். நத்தம் காட்டுப்பகுதியில் வைத்து என்னை 5 மணி நேரமாக அடித்து துன்புறுத்தினர். மேலும் என்னை துணைத்தலைவர் தேர்தலில் போட்டியிடக்கூடாது என கைகால்களில் அடித்தனர். பின்னர் கடத்தி சென்றவர்கள், மேலிடத்து உத்தரவின் பேரில் கடத்திச் சென்றதாக கூறினர். அவர்கள் திமுகவினர். பின்னர் அவர்கள் என்னை விட்டுவிட்டு ஓடிவிட்டனர். அதையடுத்து நான் அங்கிருந்து தப்பி மீண்டு வந்தேன்” என கூறினார்.
இச்சம்பவம் அங்கு பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM