அர்ஜென்டினா அணிக்கு 36 ஆண்டுகள் கழித்து உலகக்கோப்பையை வென்று கொடுத்த லியோனல் மெஸ்ஸியை GOAT என அழைப்பது ஏன் என்பதை தெரிந்துகொள்ளுங்கள்.
கத்தாரில் நடைபெற்ற 22-வது உலகக் கோப்பை கால்பந்து தொடரில் மெஸ்ஸியின் மாயஜாத்தால் அர்ஜென்டினா அணி கோப்பையை கைப்பற்றி இருக்கும் நிலையில், பலரும் மெஸ்ஸியுடன் ஆடு சின்னத்தை இணைத்து அவருக்கு வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர்.
உண்மையில் ஆட்டுக்கும் மெஸ்ஸிக்கும் என்ன தொடர்பு, ஏன் எல்லோரும் ஆடு சிம்பலை பயன்படுத்துகிறார்கள், லியோனல் மெஸ்ஸியை GOAT என அழைப்பது ஏன் என்று தெரியாதவர்கள், இங்கே தெரிந்துகொள்ளுங்கள்.
மெஸ்ஸி
FIFA
அர்ஜென்டினாவின் கேப்டனும் உலக அளவில் மிகச்சிறந்த கால்பந்து வீரருமான லியோனல் மெஸ்ஸி தனது 35 வயதில் இப்போது முதன்முறையாக உலகக்கோப்பையை வென்றார்.
இதன் மூலம் 36 ஆண்டுகளுக்குப் பிறகு அர்ஜென்டினாவின் உலகக் கோப்பை கனவு நனவாகி உள்ளது. கடைசியாக 1986-ஆம் ஆண்டு அர்ஜென்டினா அதன் இரண்டாவது உலகக்கோப்பையை வென்றது.
இது அர்ஜென்டினாவின் மூன்றாவது உலகக்கோப்பை என்பது குறிப்பிடத்தக்கது. தொடர் முழுவதும் சிறப்பாக விளையாடினாலும் ‘கோல்டன் பூட்’ அவரது கைவிட்டுப் போனது. அதனை பிரான்ஸ் அணியின் கேப்டன் கைலியன் எம்பாப்பே, மெஸ்ஸியை விட ஒரு கோல் அதிகமாக அடித்து கோல்டன் பூட்டை தட்டிச்சென்றார்.
ஆனாலும் தொடர் நாயகனுக்கான ‘கோல்டன் பால்’ விருதை மெஸ்ஸி வென்றார். இதன் மூலம் இரண்டு முறை கோல்டன் பால் விருது வென்ற முதல் வீரர் மெஸ்ஸி என்ற சாதனை படைத்தார். இதையடுத்து, தொடர்ந்து மெசிக்கு வாழ்த்துக்கள் குவிந்து வருகிறது.
GOAT என்றால் என்ன?
பலரும் ‘GOAT’ என்ற அடைமொழியோடு ஆட்டின் படத்தை வைத்து மெஸ்ஸிக்கு வாழ்த்து தெரிவித்து வருகின்றனர். மெஸ்ஸிக்கு ஏன் ஆட்டின் படத்தோடு வாழ்த்துக்கள் தெரிவிக்கிறார்கள் என்று பலரும் குழம்பி இருக்கலாம்.
அது வேறு ஒன்றும் இல்லை, கிரேட்டஸ்ட் ஆஃப் ஆல் டைம்ஸ் (Greatest Of All Time) என்பதன் சுருக்கமே GOAT. கோட் என்பதற்கு ஆடு என்ற அர்த்தம் உள்ளதால் மெஸ்ஸிக்கு ஆட்டின் படத்தையும் வைத்து வாழ்த்துக்கள் தெரிவித்து வருகின்றனர்.