*போலீஸ் பாதுகாப்புடன் அளவீடு பணி நடந்தது
திண்டிவனம் : திண்டிவனத்தில் இந்துமயான இடத்தில் எரிவாயு தகன மேடை அமைக்க அப்பகுதி மக்கள் எதிர்ப்பு தெரிவித்ததால், பலத்த போலீஸ் பாதுகாப்புடன் அளவீடு செய்யும் பணி நடந்தது.திண்டிவனத்தில் புதுச்சேரி சாலையில் உள்ள இந்துமயான இடத்தில் எரிவாயு தகன மேடை அமைக்க வேண்டும் என கடந்த இரண்டு நாட்களுக்கு முன்பு அனைத்துக் கட்சியினர் நகர மன்ற தலைவரிடம் மனு அளித்தனர். இதனால் அப்பகுதியில் அளவீடு செய்யும் பணி நேற்று நடைபெற்றது. அப்போது அப்பகுதியில் உள்ள பொதுமக்கள் இங்கு எரிவாயு தகன மேடை அமைக்க வேண்டாம் என எதிர்ப்பு தெரிவித்தனர்.
ஆனால் இந்து மயான இடத்தில் எரிவாயு தகனமேடை அமைக்க வேண்டும் என மனு அளித்தவர்கள் அளவீடு செய்ய வேண்டும் என தொடர்ந்து அதிகாரிகளை வலியுறுத்தினர். இதனால், பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டு பின்னர் அளவீடு செய்யும் பணி நடைபெற்றது. மேலும் அப்பகுதியில் எரிவாயு தகனமேடை அமைக்க வேண்டும் என வட்டாட்சியர் மற்றும் சார் ஆட்சியரிடம் 50க்கும் மேற்பட்டோர் மனு அளித்தனர். இதனால் அப்பகுதியில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.