டெல்லி: கடும் பனி மூட்டம், கடும் குளிர் எதிரொலியாக டெல்லியில் அரசு பள்ளிகளுக்கு இரண்டு வாரம் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. டெல்லி உள்ளிட்ட வட மாநிலங்களில் கடும் குளிர் நிலவி வருகிறது. அதிகாலையில் எதிரே வரும் ஆட்கள் மற்றும் வாகனங்கள் தெரியாத அளவுக்கு கடும் பனிமூட்டம் நிலவி வருவதால் விபத்துகள் ஏற்படுவது தொடர்கதையாகி வருகிறது. கடும் குளிருக்கு இடையே பள்ளி மாணவ, மாணவிகள் அதிகாலையில் எழுந்து பள்ளிக்கு செல்வதில் சிரமம் ஏற்பட்டுள்ளது. பொதுவாக டெல்லியில் இதுபோன்ற சூழலில் பள்ளிகளுக்கு குளிர்கால விடுமுறை அறிவிக்கப்படுவது வழக்கம்.
அதன்படி இந்த ஆண்டும் டெல்லி பள்ளிக்கல்வி இயக்குனரகம் குளிர்கால விடுமுறையை அறிவித்துள்ளது. 2023 ஜனவரி 1ம் தேதி முதல் ஜனவரி 15ம் தேதி வரை டெல்லியில் அனைத்து பள்ளிகளுக்கும் குளிர்கால விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. இருப்பினும் 9 முதல் 12ம் வகுப்பு மாணவ, மாணவியருக்கு மட்டும் ஜனவரி 2ம் தேதி முதல் 14 வரை சிறப்பு வகுப்புகள் நடைபெறும் என்று டெல்லி அரசு தெரிவித்துள்ளது.
ராஜஸ்தான் மாநிலத்திலும் டிசம்பர் 25 முதல் ஜனவரி 5ம் தேதி வரை பள்ளிகளுக்கு குளிர்கால விடுமுறை அறிவிக்கப்பட்டிருக்கிறது. உத்திரப்பிரதேசத்தில் கடும் குளிர் நிலவும் லக்னோவில் டிசம்பர் 31 வரை பள்ளிகளை காலை 10 மணிக்கு தொடங்க வேண்டும் என்று உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. கடும் பனிமூட்டம் மற்றும் குளிர் எதிரொலியாக பஞ்சாப், ஹரியானா உள்ளிட்ட மாநில அரசுகளும் பள்ளிகளின் வேலை நேரத்தை மாற்றி அமைத்துள்ளன.