சென்னை: என்எல்சி அனல் மின் நிலைய விபத்துகளை விசாரிக்க தனி ஆணையம் அமைக்க வேண்டும் என்று தமிழக அரசுக்கு பூவுலகின் நண்பர்கள் அமைப்பு கோரிக்கை வைத்துள்ளது.
என்எல்சி அனல் மின் நிலைய விபத்து தொடர்பாக பூவுலகின் நண்பர்கள் அமைப்பு வெளியிட்டுள்ள அறிக்கையில், “கடலூரில் உள்ள நெய்வேலி நிலக்கரி நிறுவனத்தின் நெய்வேலி புதிய அனல் மின் நிலையத்தின் அலகு ஒன்றில் நேற்று (டிச.22) காலை ஏற்பட்ட விபத்தில் ஒப்பந்த ஊழியர்கள் 4 பேரும், ஒரு நிரந்தர பணியாளரும் பலத்த காயமடைந்தனர். இவ்விபத்தில் ஒருவர் மரணமடைந்துள்ளார். இவ்விபத்து குறித்து விசாரணைக்கு உத்தரவிடப்பட்டுள்ளதாக என்எல்சி நிறுவனம் தெரிவித்துள்ளது.
நெய்வேலி அனல் மின் நிலையத்தில் இதுபோன்ற விபத்துகள் நடப்பது முதல் முறையல்ல. கடந்த 2016 முதல் 2020 வரையிலான காலத்தில் மட்டும் நெய்வேலி நிலக்கரி நிறுவத்திற்குச் சொந்தமான அனல் மின் நிலைய அலகுகளில் ஏற்பட்ட 22 விபத்து சம்பவங்களில் 29 பேர் உயிரிழந்துள்ளனர்.
ஒவ்வொரு முறை விபத்து நடக்கும் போதும், நிர்வாகத்தால் அது தனிநபர் தவறாக சித்தரிக்கப்பட்டு வந்துள்ளதே தவிர மைய பிரச்சினைகளை ஆராய்ந்து சரி செய்ததாக தெரியவில்லை. 2020-ம் ஆண்டு ஜூலை மாதம் நடந்த விபத்து குறித்த அறிக்கை வெளிப்படைத்தன்மை இல்லாமலும் தற்போது வரை பொதுவெளியில் வெளியிடப்படாமலும் உள்ளது குறிப்பிடத்தக்கது. தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின்கீழ் இவ்விபத்துகள் குறித்து மேற்கொள்ளப்பட்ட விசாரணை அறிக்கைகளை தர என்எல்சி நிர்வாகம் மறுத்து வருகிறது.
நெய்வேலியில் தொடரும் இது போன்ற விபத்துகளுக்கு முக்கிய காரணம், போதிய பயிற்சியும் தொழில்நுட்ப அனுபவமும் இல்லாத தற்காலிக ஒப்பந்த ஊழியர்கள் கொதிகலன் இயக்குவது, பராமரிப்பது போன்ற ஆபத்தான பணிகளில் ஈடுபடுத்தப்படுவதுதான். விபத்தைத் தவிர்க்க கூடிய அல்லது விபத்து சூழலை கையாளக்கூடிய ஆற்றல் இல்லாதவர்களை வைத்து கொதிகலன்களை இயக்கி விட்டு பின் தனி நபரின் மீது பழிபோடுவது எப்படி சரியான போக்காகும்.
கடந்த பல ஆண்டுகளாக என்எல்சி தொழிலார்கள் பல்வேறு பிரச்சினைகளுக்காக நிர்வாகத்தை எதிர்த்து தொடர்ந்து போராடி வருகிறார்கள்.என்எல்சியின் நிர்வாக சீர்கேடும் அதைத் தொடர்ந்து ஏற்பட்ட இயக்க தரக் குறைபாடும் விபத்திற்கான கூடுதல் காரணங்கள். வேறு எந்த அனல் மின் நிலையங்களிலும் இல்லாத அளவிற்கு என்எல்சியில் அதிகமாக விபத்துகளும் உயிரிழப்புகளும் நடைபெற்று வருவதால் என்எல்சி நிர்வாகம் மீது தமிழக அரசு விசாரணை மேற்கொள்ள தனி ஆணையம் அமைக்க வேண்டும்.
சுற்றுச்சூழல் சீர்கேட்டினை ஏற்படுத்தும், விபத்துக்களை அதிகரிக்கும் இதுபோன்ற அனல் மின் நிலையங்களையும், ஆபத்தான அணு மின் நிலையங்களையும் மூடிவிட்டு, காலநிலை மாற்றத்தை எதிர்கொள்ள, பாதுகாப்பான புதுப்பிக்கக்கூடிய சூரிய ஒளி மற்றும் காற்றாலை மின் உற்பத்தியை நோக்கி தமிழ்நாடு பயணிக்க வேண்டும் என்று பூவுலகின் நண்பர்கள் அமைப்பு வலியுறுத்துகிறது” என்று அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.