ஆப்கானிஸ்தானில் உள்ள பல்கலைக்கழகங்களில், அனைத்து பெண்களுக்குமான கல்வியை தடை செய்து ஆளும் தாலிபான் அரசு உத்தரவிட்டுள்ளது. இது, சமீபத்தில் பெண்கள் மீது விதிக்கப்பட்ட கடுமையான உரிமை மீறல்.
கடந்த 2021-ம் ஆண்டு ஆகஸ்ட் மாதம், ஆப்கானிஸ்தானை தாலிபான்கள் கைப்பற்றினர். இவர்கள் ஆட்சிக்கு வந்த பின்னர் பல்வேறு தரப்பிலும் அந்நாட்டு மக்களின் பல அடிப்படை உரிமைகள் பறிக்கப்பட்டன. குறிப்பாக பெண்கள் மீது பல்வேறு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டன. அதிகாரத்தைக் கைப்பற்றியபோது, சர்வதேச ஆதரவைப்பெற தாலிபான்கள் ஆரம்பத்தில் மிதமான பிம்பத்தை முன்வைக்க முயன்றனர். பெண்கள் மற்றும் சிறுமிகளின் உரிமைகளைப் பாதுகாப்பதாக சர்வதேச சமூகத்திற்கு பல வாக்குறுதிகளை அளித்திருந்த நிலையில், அதற்கு நேர்மாறாகச் செய்து, அவர்களின் உரிமைகள் மற்றும் சுதந்திரங்களைத் திட்டமிட்டு ஒடுக்கி வருகின்றனர்.
ஆப்கானிஸ்தானில் உள்ள பெண்கள் பெரும்பாலான துறைகளில் வேலை செய்ய முடியாது, நீண்ட தூர பயணத்திற்கு ஆண் பாதுகாவலர் தேவை, மற்றும் பொது இடங்களில் தங்கள் முகத்தை மறைக்க உத்தரவிடப்பட்டுள்ளது. பெண்களின் கல்விக்கும் வரம்புகளை விதித்து, குறிப்பிட்ட பணியிடங்களில் இருந்து பெண்களை தடை செய்துள்ளனர். நவம்பரில், ஆப்கானிஸ்தான் பெண்கள் காபூலில் உள்ள பொழுதுபோக்கு பூங்காக்களுக்குள் நுழைவதைத் தடுத்தனர். பெண்கள் பொதுப் பூங்காக்களை அணுகுவதற்கான கட்டுப்பாடுகளை தாலிபான் அரசாங்கம் அறிவித்தது. மேல்நிலைப்பள்ளி கல்வியை பெண்கள் தொடரவும் தடை விதித்தனர்.
இதன் தொடர்ச்சியாகப் பெண்களின் கல்லூரிப் படிப்பை தடை செய்ததோடு, பெண்கள் பயிலும் பல்கலைக்கழகங்களை மூடவும் தற்போது தாலிபான்கள் உத்தரவிட்டுள்ளனர். ஆப்கானிஸ்தான் உயர்கல்வி அமைச்சகத்தின் செய்தித் தொடர்பாளர், இதனை உறுதிப்படுத்தினார். தாலிபான்களின் அமைச்சரவைக் கூட்டத்தில் இந்த முடிவு எடுக்கப்பட்டதாகவும், இந்த உத்தரவு உடனடியாக அமலுக்கு வருவதாகவும், அந்த நாட்டு கல்வி அமைச்சகம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
தாலிபான்களின் இந்த முடிவை பல்வேறு தரப்பினரும் கண்டித்து வருகின்றனர். மனித உரிமைகள் கண்காணிப்பகம், இந்த தடையை விமர்சித்துள்ளது. “ஆப்கான் பெண்களின் கல்வி உரிமையை மீறும் வெட்கக்கேடான முடிவு இது. ஆப்கானியர்களின், குறிப்பாக பெண்களின் அடிப்படை உரிமைகளை தாங்கள் மதிக்கவில்லை என்பதை தாலிபான்கள் ஒவ்வொரு நாளும் தெளிவுபடுத்துகிறார்கள்” என்று மனித உரிமை கண்காணிப்பகத்தின் அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அமெரிக்க வெளியுறவுத்துறை செய்தித் தொடர்பாளர் நெட் பிரைஸ் கூறுகையில், “பல்கலைக்கழகங்களில் பெண்களை தடை செய்யும் தாலிபானின் பாதுகாப்பற்ற முடிவை அமெரிக்கா கண்டிக்கிறது. இம்முடிவு, தாலிபான்களுக்கு குறிப்பிடத்தக்க விளைவுகளை ஏற்படுத்தும் மற்றும் சர்வதேச சமூகத்திலிருந்து அவர்களை அந்நியப்படுத்தும், அவர்கள் விரும்பும் சட்டபூர்வ அங்கீகாரத்தை மறுக்கும்” என்றார். இந்தியா, ஆப்கான் பெண்கள் கல்வி கற்க தலிபான்கள் விதித்துள்ள தடை கவலையளிப்பதாகத் தெரிவித்துள்ளது.