இந்தியாவில் பரவ ஆரம்பித்துள்ள புதிய வகை கொரோனாவை கையாள்வதற்கான அவசரகால ஒத்திகை, டிச.27-ம் தேதி நாடு முழுவதும் நடைபெறவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
சீனா, ஜப்பான், பிரேசில் உள்ளிட்ட நாடுகளில் கடந்த சில வாரங்களாக கொரோனா நோய்த் தொற்று வேகமாகப் பரவி வருகிறது. சீனாவில் பரவி வரும் பிஎஃப் 7, பிஎஃப் 12 என்ற ஒமைக்ரான் திரிபு வகை கொரோனா குஜராத், ஒடிசா மாநிலங்களில் கண்டறியப்பட்டுள்ளது. இதையடுத்து, மத்திய அரசும் மாநில அரசுகளும் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றன.
இதுகுறித்து அமைச்சர்கள், அதிகாரிகளுடன் பிரதமர் நரேந்திர மோடி நேற்று ஆலோசனை நடத்தினார். பின்னர், நாடாளுமன்ற மக்களவையில் பேசிய மத்திய சுகாதாரத்துறை அமைச்சர் மன்சுக் மாண்டவியா, “வெளிநாட்டில் இருந்து வரும் பயணிகளுக்கு விமான நிலையத்தில் ஆர்டிபிசிஆர் எனும் கொரோனா பரிசோதனை தொடங்கப்பட்டுள்ளது. தேவையான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை அரசு எடுத்து வருகிறது: என்று தெரிவித்தார்.
இந்நிலையில் டிசம்பர் 27-ம் தேதி, நாடு முழுவதும் உள்ள மருத்துவமனைகளில் புதிய வகை கொரோனாவை கையாள்வதற்கான அவசரகால ஒத்திகை நடைபெறுகிறது. இந்த ஒத்திகை நிகழ்ச்சியில் மத்திய சுகாதாரத்துறை அமைச்சர் மன்சுக் மாண்டவியா பங்கேற்கிறார் எனும் தகவல் வெளியாகியுள்ளது.