நடிகர் விஜய் நடிப்பில் அடுத்ததாக வெளியாக இருக்கும் திரைப்படம் வாரிசு. வம்சி பைடிபல்லி இயக்கியிருக்கும் இந்தப் படம் பொங்கல் விருந்தாக திரைக்கு வர இருக்கிறது. அஜித்குமாரின் துணிவு படத்துடன் நேருக்கு நேர் மோதுகிறது. நீண்ட நாட்களுக்குப் பிறகு அஜித் மற்றும் விஜய் படங்கள் ஒரே நேரத்தில் ரிலீஸாவது திரைத்துறை வட்டாரத்தில் மட்டுமல்லாது ரசிகர்கள் மத்தியிலும் அமோக எதிர்பார்ப்பு எழுந்துள்ளது. இதனையொட்டி இரண்டு படங்களுக்குமான முன்பதிவுகள் ஏகபோகமாக நடந்து வருகிறது. இது இப்போது வாரிசு படக்குழுவுக்கு மகிழ்ச்சியாக இருந்தாலும், பொங்கல் ரிலீஸூக்கு தேதியை உறுதி செய்ய அந்தப் படக்குழு திரைமறைவில் சந்தித்த தடைகள் ஏராளம்.
முதலில் தெலுங்கு பட உலகினர் வாரிசு படதுக்கு எதிராக குரல் எழுப்ப, தமிழகத்தில் துணிவுக்கு போட்டியாக தியேட்டர்கள் கிடைப்பதில் பெரும் சிக்கல் எழுந்தது. காரணம், உதயநிதி ஸ்டாலினின் ரெட் ஜெயண்ட் மூவீஸ் நிறுவனம் துணிவு படத்துக்காக பெரும்பாலான தியேட்டர்களை லாக் செய்து வைத்திருந்தது. விஜய்யின் வாரிசுக்கு ஆயிரத்துக்கும் மேற்பட்ட தியேட்டர்களில் 400க்கும் குறைவான தியேட்டர்களே கிடைக்கும் சூழல் ஏற்பட்டது. ஒருகட்டத்தில் பொங்கலுக்கு ரிலீஸாகுமா? இல்லையா? என்ற கேள்விகூட எழத் தொடங்கியது.
இந்த நேரத்தில் வாரிசு படத்தின் தயாரிப்பாளர் தில் ராஜூ, பேட்டி ஒன்றில் வாரிசு படத்துக்கு ஏற்பட்ட நெருக்கடியை வெளிப்படையாக பேசினார். தியேட்டர் ஒதுக்கீடு குறித்து உதயநிதி ஸ்டாலினிடம் நேரடியாக பேச இருப்பதாகவும் தெரிவித்தார். பின்னர் திரைமறைவில் நடந்த பேச்சுவார்த்தைகள் மூலம் ரெட் ஜெயண்ட் மூவீஸ் நிறுவனம் வாரிசு படத்தின் சென்னை, கோயம்பத்தூர், வட ஆற்காடு, தென் ஆற்காடு ஆகிய ஏரியாக்களின் வெளியீட்டு உரிமையை வாங்கியது. இத்துடன் வாரிசு படத்தின் பொங்கல் ரிலீஸூக்கு இருந்த சிக்கல் முடிவுக்கு வந்தது. தற்போது ஆடியோ வெளியீட்டு விழாவுக்கான ஏற்பாடுகள் தடபுடலாக நடந்து வருகிறது.
இந்நிலையில், வாரிசு ஆடியோ ரிலீஸில் விஜய் அரசியல் பேசுவாரா? என்ன குட்டிக் கதை சொல்வார் என்ற எதிர்பார்ப்பு விஜய் ரசிகர்கள் மத்தியில் எழுந்திருக்கிறது. நாளை நடைபெறும் பாடல் வெளியீட்டு விழாவில், வாரிசுக்கு ஏற்பட்ட நெருக்கடி மற்றும் தன்னுடைய அரசியல் ஆசை குறித்து ஒரு சில வார்த்தைகளாவது பேசுவார் என கூறப்படுகிறது. சன்பிக்சர்ஸ் எடுத்த ‘பீஸ்ட்’ படத்துக்கு இசை வெளியீட்டு விழா நடத்தப்படவில்லை. இதன்பின்னணியில் அரசியல் இருப்பதாக கூறப்பட்டது. ஆனால், வாரிசு மேடை விஜய்கான மேடையாக பார்க்கப்படுகிறது. இதில் அவர் பேசும் ஒவ்வொரு வார்த்தைகளும் உன்னிப்பாக கவனிக்கப்படும் என்பதால், விஜய்யும் அதற்காக தன்னை தயார்படுத்திக் கொண்டிருப்பதாக கூறப்படுகிறது.