அரியலூரில் 20 ஆயிரம் ஏக்கரில் சாகுபடி பொங்கலுக்கு தயாரான தித்திக்கும் செங்கரும்புகள்-விற்பனையை எதிர்நோக்கி விவசாயிகள்

தா.பழூர் : அரியலூரில் 20 ஆயிரம் ஏக்கரில் பொங்கலுக்கு தேவையான செங்கரும்புகள் சாகுபடி செய்து தயார் நிலையில் உள்ளது.தமிழர்கள் திருநாளான தை முதல் நாள் பொங்கல் விழாவானது தமிழர்களின் பாரம்பரிய திருவிழாவாக கொண்டாடப்படுகிறது. பொங்கல்விழா என்று கூறியவுடன் முதலில் நமக்கு நினைவு வருவது தித்திக்கும் செங்கரும்புதான். பொங்கல் திருவிழாவை பொருத்தவரை விவசாயத்தை ஒப்பிட்டு இந்த விழாவானது கொண்டாடப்படுகிறது. நிலம், நீர், காற்று, நெருப்பு, ஆகாயம் என்ற பஞ்ச பூதங்களையும் ஒப்பிடுகின்றனர் தமிழர்கள். மேலும் தமிழர்கள் இந்த விழாவை உழவுக்கு பெரிதும் உதவியாக இருக்கும் சூரியனுக்கும், உழவுக்கு பயன்படுத்தும் உயிரினங்களான ஆடு, மாடுகள் மற்றும் உழவு பொருட்களான ஏர், மண்வெட்டி, நெல் அறுவடை செய்யும் அருவாள் என உழவர்கள் உழவுக்கு பயன்படுத்தும் அனைத்தையும் வணங்கி வழிபடுவது வழக்கம்.

இந்த விழாவானது போகி பண்டிகையில் தொடங்கி கரிநாள் வரை நான்கு நாட்கள் நடைபெறும். இதில் போகி பண்டிகை, காணும் பொங்கல், மாட்டு பொங்கல், கரிநாள் என நான்கு நாட்கள் நடைபெறும்.இதில் மிக சிறப்பு வாய்ந்ததாக பொங்கல் பண்டிகை காணும் பொங்கல் கொண்டாடப்படுகிறது. இதில் நல்ல விளைச்சல் கொடுத்த பூமி, மற்றும் சூரியனுக்கு நன்றி செலுத்தும் வகையில் சூரியன் பொங்கலும், விவசாயத்திற்கு உதவிய கால்நடை மற்றும் இயந்திரங்களுக்கு நன்றி செலுத்தும் வகையில் மாட்டு பொங்கலும் கொண்டாடப்பட்டு வருகிறது. இப்பண்டிகை தமிழகத்தில் மட்டுமல்லாமல் தமிழர்கள் அதிகமாக வாழக்கூடிய வெளிநாடுகளிலும் மிகுந்த உற்சாகத்துடன் கொண்டாடப்பட்டு வருகிறது. வரக்கூடிய பொங்கல் பண்டிகையை தமிழர்கள் ஆவலுடன் எதிர்பார்த்துள்ளனர்.

பொங்கல் பண்டிகை என்றாலே நினைவுக்கு வருவது செங்கரும்பு, இஞ்சி, மஞ்சள், வெல்லம் மற்றும் பொங்கல் பானையாகும். பொங்கல் பண்டிகையை ஒட்டி அனைத்து வீடுகளிலும் தவறாமல் இடம் பெறுவது செங்கரும்பு. புதிய தம்பதிகள் மட்டுமின்றி உடன் பிறந்த சகோதரிகளுக்கு செங்கரும்பு அடங்கிய பொங்கல் சீதனம் கொடுக்கும் பழக்கமும் காலம் காலமாக தமிழர்களிடையே இருந்து வருகிறது.

இந்த பொங்கல் பண்டிகையை முன்னிட்டு தா.பழூர் சுற்றி உள்ள பல்வேறு கிராமங்களான சிலால், வானதிரையான் பட்டினம், சுத்தமல்லி, உல்லியகுடி, சுந்தரேசபுரம், ஆதிச்சனூர், கொலையனூர் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் விவசாயிகள் பொங்கல் கரும்பு விவசாயம் செய்துள்ளனர். இந்த பொங்கல் கரும்பு இப்பண்டிகை காலத்தில் அறுவடை செய்யும் வகையில் விவசாயிகள் செங்கரும்பு சாகுபடி செய்துள்ளனர்.

அரியலூர் மாவட்டத்தில் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் சுமார் 20 ஆயிரம் ஏக்கர் பரப்பளவில் செங்கரும்பு சாகுபடி செய்யப்பட்டுள்ளது. இந்த செங்கரும்பு மின் மோட்டார் மூலம் பாசனம் பெற்று சாகுபடி செய்யப்பட்டு வருகிறது. இவ்வாறு சாகுபடி செய்யப்பட்டுள்ள செங்கரும்பு பொங்கல் பண்டிகையையொட்டி அறுவடைக்கு தயார் நிலையில் உள்ளது. இந்நிலையில் பொங்கல் பண்டிகை நெருங்கி வருவதையொட்டி செங்கரும்பு மொத்த வியாபாரிகள் செங்கரும்பு சாகுபடி செய்துள்ள விவசாயிகளிடம் கரும்புகளை மொத்தமாக கொள்முதல் செய்ய விவசாயிகளை இன்னும் சில நாட்களில் தேடி வருவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.

கடந்தாண்டு தமிழக அரசின் மூலம் ரேஷன் அட்டைதாரர்களுக்கு பொங்கல் பரிசு தொகுப்புடன் செங்கரும்பும் வழங்கப்பட்டது. இதனால் கடந்த வருடம் ஒரு கரும்பிற்கு 12 ரூபாய் முதல் 15 ரூபாய் வரை விலை கொடுத்து கூட்டுறவு துறை மூலம் கரும்பு கொள்முதல் செய்யப்பட்டது. இதனால் மொத்த வியாபாரிகளும் அரசு நிர்ணயித்ததை விட அதிக விலை கொடுத்து செங்கரும்புகளை கொள்முதல் செய்து சில்லறையில் விற்பனை செய்தனர். இதனால் செங்கரும்பு விவசாயிகளுக்கு அதிகப்படியான லாப விலை கிடைக்காவிட்டாலும் கட்டுப்படியான விலை கிடைத்தது.

இதுகுறித்து செங்கரும்பு விவசாயிகள் கூறுகையில், கடந்த ஆண்டை விட இந்த ஆண்டு உரச்செலவு கூலி ஆட்கள் செலவு மற்றும் விவசாயத்திற்கான இடுபொருட்கள் செலவு ஆகியவை பெருமளவு அதிகரித்துள்ளது. இதனால் ஒரு ஏக்கர் செங்கரும்பு சாகுபடி செய்ய சுமார் 50 ஆயிரத்திலிருந்து 60 ஆயிரம் வரை செலவாவதாகவும் விவசாயிகள் தெரிவிக்கின்றனர்.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.