ஹிஜாப் விதிகளை முறையாக பின்பற்றாத பெண்கள், பல்கலைக்கழகத்திற்கு செல்லும் போது திருமணத்திற்கு செல்வது போல் உடை அணிவதாக, ஆப்கானிஸ்தான் உயர் கல்வித் துறை அமைச்சர் நேதா முகமது நதீம் தெரிவித்து உள்ளார்.
தெற்கு ஆசிய நாடான ஆப்கானிஸ்தானில், கடந்த 2021 ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் 15 ஆம் தேதி, ஆட்சி மற்றும் அதிகாரத்தை தாலிபான் அமைப்பினர் கைப்பற்றினர். சுமார் 20 ஆண்டுகளுக்கு பிறகு அமெரிக்கப் படைகள் அங்கிருந்து வெளியேறியதைத் தொடர்ந்து தாலிபான்கள் மீண்டும் கால் பதித்தனர்.
ஆப்கானிஸ்தானில் ஓராண்டுக்கும் மேலாக ஆட்சி செய்து வரும் தாலிபான்கள் அந்நாட்டு மக்களுக்கு பல்வேறு கட்டுப்பாடுகளை விதித்துள்ளனர். குறிப்பாக, அந்நாட்டின் பெண்கள் பாலின பாகுபாட்டால் பல சிக்கல்களை எதிர்கொண்டு வருகின்றனர். இதற்கிடையே, ஆப்கானிஸ்தான் பல்கலைக்கழகங்களில் பெண்கள் படிப்பதற்கு தாலிபான்கள் இடைக்கால தடை விதித்தனர். இதற்கு, அமெரிக்கா உள்ளிட்ட நாடுகள் கடும் கண்டனம் தெரிவித்து உள்ளன.
இந்நிலையில், பல்கலைக்கழகங்களில் பெண்கள் படிக்க தடை விதிக்கப்பட்டது குறித்து, தாலிபான் அரசில், உயர் கல்வித் துறை அமைச்சராக இருக்கும் நேதா முகமது நதீம் விளக்கம் அளித்துள்ளார். இது தொடர்பாக அவர் கூறியதாவது:
பல்கலைக்கழகங்களில் பெண்கள் படிக்க தடை: தாலிபான்களுக்கு அமெரிக்கா கண்டனம்!
துரதிர்ஷ்டவசமாக 14 மாதங்கள் கடந்தும், பெண்களின் கல்வி தொடர்பான இஸ்லாமிய எமிரேட்டின் உயர் கல்வி அமைச்சகத்தின் அறிவுறுத்தல்கள் செயல்படுத்தப்படவில்லை. பல்கலைக்கழகங்களுக்கு வரும் பெண்கள் ஒரு திருமணத்திற்கு செல்வது போல் ஆடை அணிந்தனர். வீட்டிலிருந்து பல்கலைக்கழகங்களுக்கு வரும் சிறுமிகளும் ஹிஜாப் பற்றிய வழிமுறைகளைப் பின்பற்றவில்லை.
சில அறிவியல் பாடங்கள் பெண்களுக்கு ஏற்றதாக இல்லை. பொறியியல், விவசாயம் மற்றும் வேறு சில படிப்புகள் மாணவிகளின் கண்ணியம் மற்றும் மரியாதை மற்றும் ஆப்கனிய கலாச்சாரத்துடன் பொருந்தவில்லை. ஆண்களின் துணை இன்றி சில பெண்கள் தனியாக பயணம் செய்கின்றனர்.
இவ்வாறு அவர் கூறினார்.