நாளை (டிசம்பர் 24ம் தேதி) முதல் சென்னை விமான நிலையத்தில், வெளிநாட்டு பயணிகளுக்கு கொரோனா பரிசோதனை மேற்கொள்ளப்படும் என்று மக்கள் நலவாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார்.
இது பற்றி அமைச்சர் மா.சுப்பிரமணியன் பத்திரிக்கையாளர்களுக்கு அளித்த பேட்டியின் போது, “வெளிநாடுகளிலிருந்து வரும் நபர்களுக்கு கொரோனா வைரஸ் பரிசோதனை மேற்க்கொள்ள மத்திய அரசானது உத்தரவு பிறப்பித்துள்ளது.
அதனடிப்படையில் ஜப்பான், சீனா, தென்கொரியா மற்றும் ஹாங்காங் உள்ளிட்ட நாடுகளிலிருந்து தமிழ்நாட்டிற்க்கு வருகின்ற வெளிநாட்டு பயணிகளுக்கு நாளை முதல் கொரோனா வைரஸ் பரிசோதனை மேற்கொள்ளப்படவுள்ளது.
சென்னை, திருச்சி, மதுரை, கோவை போன்ற பன்னாட்டு விமான நிலையங்களில் வருகின்ற பயணிகளுக்கு நாளை முதல் கொரோனா பரிசோதனை மேற்க்கொள்ளப்படும்.
தமிழகத்தில் கொரோனா பரிசோதனை மருந்துகள் 6-மாத காலத்திற்கு தேவையான அளவு இருப்பு உள்ளது. மருத்துவமனைகளில் படுக்கைகள், ஆக்சிஜன் சிலிண்டர்கள் கையிருப்பில் உள்ளது. இவ்வாறு அவர் கூறினார்.