விருதுநகர்: சாலைப் பணிகளை விரைந்து முடிக்க வேண்டும் என அதிகாரிகளுக்கு பொதுப் பணிகள்,நெடுஞ்சாலைகள் மற்றும் சிறு துறைமுகங்கள் துறை அமைச்சர் எ.வ.வேலு உத்தரவிட்டார்.
ஒருங்கிணைந்த சாலை உட் கட்டமைப்பு மேம்பாட்டு திட்டத்தின் மூலம் 2021-2022 நிதியாண்டில் ரூ.112 போடி நிதி ஒதுக்கப்பட்டு 142 கிலோ மீட்டர் மாவட்ட மற்றும் இதர சாலைகள் அகலப்படுத்துதல், மேம்பாடு செய்தல், தடுப்பு சுவர் கட்டுதல் மற்றும் பல பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. இத்திட்டத்தின் கீழ் விருதுநகர் அருகே ஆவுடையாபுரம்- கோட்டூர் இடையே 4.7 கி.மீட்டர் நீலத்திற்கு ரூ.7.31 கோடி மதிப்பில் சாலையை அகலப்படுத்துதல், மேம்பாடு செய்தல், பாலங்கள் மற்றும் தடுப்புச் சுவர் கட்டுதல் போன்ற பணிகள் முடிக்கப்பட்டுள்ளன.
இப்பணிகளை அமைச்சர் எ.வ.வேலு இன்று காலை பார்வையிட்டு ஆய்வு செய்தார். அப்போது சாலைகளில் தரமாக அமைக்க வேண்டும் என்றும் பணிகளை விரைந்து முடிக்க வேண்டும் என்றும் நெடுஞ்சாலை துறை அதிகாரிகள் மற்றும் ஒப்பந்ததாரர்களுக்கு உத்தரவிட்டார்.
அதை தொடர்ந்து விருதுநகரில் புதிதாக கட்டப்பட்டு வரும் மாவட்ட ஆட்சியர் அலுவலக கட்டுமான பணிகளையும் அமைச்சர் எ.வ. வேலு பார்வையிட்டு ஆய்வு செய்தார். பின்னர் மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்ட அரங்கில் சாலை பாதுகாப்பு குறித்த ஆய்வு கூட்டத்தில் பங்கேற்று பேசினார்.
இந்நிகழ்ச்சிகள் வருவாய்த்துறை அமைச்சர் சாத்தூர் ராமச்சந்திரன், தொழில் முதலீட்டு ஊக்குவிப்பு மற்றும் வர்த்தகத் துறை அமைச்சர் தங்கம் தென்னரசு, மாவட்ட ஆட்சியர் மேகநாத ரெட்டி ஆகியோர் உடன் இருந்தனர்.