நயன்தாராவின் ‘கனெக்ட்’ படம் பார்வையாளர்களுக்கு கனெக்ட் ஆனதா? – திரைப்பார்வை

நயன்தாராவும், அவர் மகளும் லாக்டௌனில் வீட்டுக்குள் முடங்கிக் கிடக்கும் போது, பேய் வந்தால் என்ன நடக்கும் என்பது தான் கனெக்ட் படத்தின் ஒன்லைன்.

கொரோனா லாக்டௌன் காலத்தில் நயன்தாராவும், அவர் மகளும் வீட்டுக்குள் முடங்கிக் கிடக்கிறார்கள். நயனின் கணவர் வினயோ கொரோனா கால மருத்துவர் என்பதால் மருத்துவமனையிலேயே முழுநேரமும் இருந்துவிடுகிறார். நயனின் தந்தை சத்யராஜும் வேறொரு இடத்தில் முடங்கிவிடுகிறார். நமக்கு கொரோனா காலத்தில் இருந்த எல்லா பிரச்சினையும், நயன் குடும்பத்துக்கும் இருக்கத்தானே செய்யும்.

திரைவழி மட்டும் தான் ஒட்டுமொத்த குடும்பத்துக்குமான Connect தொடர்கிறது. இப்படியானதொரு சூழலில் வீட்டில் ஒரு துர்மரணம் நிகழ, அதிலிருந்து விடுபட குடும்பமே சிக்கித் தவிக்கிறது. இறந்தவருடன் பேச நயனின் மகள் ஆர்வம் கொள்ள, அது அழையா விருந்தாளியாக பேயை வீட்டுக்குள் அழைத்து வந்துவிடுகிறது. வந்த பேய் வீட்டுக்குள் என்ன செய்கிறது? லாக்டௌனில் இருக்கும் குடும்பம், பேயை எப்படி சமாளிக்கிறார்கள்? பேயிடம் இருந்து மீண்டார்களா என்பதாக நீள்கிறது அஷ்வின் சரவணன் இயக்கியிருக்கும் Connect.

image

தனித்தனியாக நடிக்கும் இதுமாதிரியான படங்களில் எமோஷனலை காட்டுவது என்பது எளிதல்ல. அதிலும், ஹாரர் மாதிரியான பீதிக்கான எமோஷன்கள் என்பது இன்னுமே கடினம். ஆனாலும் நயனும், சத்யராஜும் சிறப்பாக அதை செய்திருக்கிறார்கள். அன்னாவாக வரும் ஹனியா நஃபிசா அட்டகாசமான சாய்ஸ். மனநல மருத்துவரிடம் அவர் பேசும் காட்சி அப்ளாஸ் ரகம்., பேய் ஓட்டும் பாதிரியாராக வரும் அனுபம் கேர், ஏனோ பெரிதாக கதைக்கு உதவவில்லை.

படத்தின் பெரும்பலம் பின்னணி இசையும், ஒலிக் கலவையும். ப்ரித்வி சந்திரசேகரின் பின்னணி இசை ஆகட்டும், சச்சின் & ஹரிஹரனின் சவுண்ட் டிசைன் ஆகட்டும் படம் நமக்குக் கொடுக்கக்கூடிய எல்லா ஹாரரையும் காதுகளுக்கு கச்சிதமாகக் கடத்திவிடுகிறது. எல்லா நடிகர்களும் லேப்டாப்பும், கையுமாக இருந்தாலும், அதை நமக்கு எந்தவித தொந்தரவும் இல்லாமலும், அதோடு பேய் பீதியையும் கொடுக்க உதவியிருக்கிறது மணிகண்டன் கிருஷ்ணமாச்சாரியின் கேமரா. கிறுஸ்துவ மத ரீதியிலான குடும்பம், அதற்கேற்ற சின்ன சின்ன ஆர்ட் டிசைன் என ஈர்க்கிறது சிவ ஷங்கர் & ஸ்ரீரமனின் கலை இயக்கம்.

image

லாக்டௌன் காலத்தில் நிறைய சினிமாக்கள் வெவ்வேறு யுக்திகளில் எடுக்கப்பட்டிருக்கின்றன. பெண்களை முதன்மை கதாபாத்திரங்களாக வைத்து படங்கள் இயக்கிவரும் அஷ்வின் சரவணன், இந்த லாக்டௌன் காலத்தில் பேயிடம் சிக்கிக்கொள்ளும் இரு பெண்கள் என்கிற வகையில் சுவாரஸ்யமான ஒன்லைனைப் பிடித்திருக்கிறார். அவரின் முந்தைய படங்களான மாயாவும், கேம் ஓவரும் ஹிட் என்பதாலேயே, இந்தப் படத்துக்கான எதிர்பார்ப்பு இன்னும் அதிகமாக இருந்தது.

படத்தின் பெரும் பகுதிகள் திரைவழியே நடந்தாலும், சுவாரஸ்யமான விஷயங்கள் மூலம் தொய்வில்லாமல் கொண்டுப் போயிருக்கிறார்கள். குறிப்பாக கொரோனா காலத்தில் ஒருவரை ஒருவர் Connect செய்துகொள்வது தான் பெரும்பாடாக இருந்ததால், அதையே கதையின் ஓர் அங்கமாக வைத்தது ஸ்வீட் சர்ப்ரைஸ். அதே சமயம், அஷ்வின் சரவணனும், காவ்யா ராம்குமாரும் எழுதியிருக்கும் கதை கேட்க சுவாரஸ்யமாய் இருந்தாலும், பேய்ப் வருவதற்கான காரணம் இன்னும் அழுத்தமாக இருந்திருக்கலாம்.

ஜம்ப்ஸ்கேர் தவிர்த்துவிட்டு பேய்க்காக பீதியோ, பேய் இந்த வீட்டை விட்டு போக வேண்டும் என்கிற பதைபதைப்போ நமக்கு கிஞ்சித்தும் வர மறுக்கிறது. அதனாலேயே, பேய் இருந்தால் நமக்கென்ன டோனில் கதை நகர்கிறது. அதே போல், கொரோனா மாதிரியானதொரு பெருந்தொற்று விஷயத்தில் இப்படியான கதைக்களம் என்பது சற்று நெருடலாக இருக்கிறது. இங்கு படைப்பாளிகளுக்கு ஒரு சமூகப்பொறுப்பு இருக்கிறது என்பதை அனைவரும் உணர வேண்டியதும் அவசியம்.

கதையும் திரைக்கதையும் போதிய சுவாரஸ்யம் இல்லாததால், வெறுமனே டெக்னிக்கல் மிரட்டலாக கனெக்ட் ஆகாமல் முற்றுப்பெறுகிறது இந்த Connect.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.