இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டுத்துறை அமைச்சராகப் பொறுப்பேற்றிருக்கும் உதயநிதி ஸ்டாலின், திண்டுக்கல் மாவட்டத்தில் தனது முதல் சுற்றுப்பயணத்தைத் தொடங்கியிருக்கிறார். நேற்று இரவு சென்னையிலிருந்து விமானம் மூலம் மதுரை வந்த அவர், காரில் கொடை ரோடு, திண்டுக்கல்லில் பல்வேறு இடங்களில் கட்சி கொடியேற்றினார்.
இன்று காலை வேடசந்தூரில் நடைபெற்ற கட்சி கொடியேற்றும் நிகழ்வில் பங்கேற்றுவிட்டு, ஒட்டன்சத்திரம் தொகுதியில் உள்ள இடையகோட்டையில் 4 மணி நேரத்தில் 6 லட்சம் மரக்கன்றுகள் நடவு செய்த சாதனை நிகழ்வில் பங்கேற்றார். இதில் உணவுத்துறை அமைச்சர் சக்கரபாணி, ஊரகத்துறை அமைச்சர் ஐ.பெரியசாமி, வனத்துறை அமைச்சர் மதிவேந்தன் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.
இந்த நிகழ்ச்சியை முடித்துவிட்டு திண்டுக்கல் கலெக்டர் அலுவலகத்தில் நடைபெற்ற இளைஞர் நலன், விளையாட்டுத்துறை, சிறப்புத்திட்ட செயலாக்கம், வறுமை ஒழிப்பு மற்றும் ஊரகக் கடன் திட்டங்களுக்கான ஆய்வுக்கூட்டத்தில் பங்கேற்றார். சம்பந்தப்பட்ட அதிகாரிகளிடம் திட்டங்களின் தற்போதைய நிலைமை குறித்து கேட்டறிந்தார்.
பிறகு கலெக்டர் அலுவலகம் அருகே உள்ள அங்கு விலாஸ் பள்ளி வளாகத்தில், தி.மு.க மூத்த உறுப்பினர்களுக்கு பொற்கிழி வழங்கும் நிகழ்வில் பங்கேற்றார். இதில் பேசிய அமைச்சர் உதயநிதி ஸ்டாலின், “பெரியார், அண்ணா, கலைஞர் காலத்திலிருந்து தி.மு.க-வுக்காக உழைத்துக் கொண்டிருக்கும் மூத்த உறுப்பினர்களுக்கு பொற்கிழி வழங்கும் நிகழ்வு என்றால் மட்டும் என்னை அழையுங்கள் என மாவட்டச் செயலாளர்களிடம் கூறியிருந்தேன்.
அதனடிப்படையில் கடந்த ஓராண்டாக அமைச்சர் சக்கரபாணி திண்டுக்கல்லில் 2 நிகழ்ச்சிகள் இருக்கின்றன எனக் கூறி அழைப்பு விடுத்தார். ஆனால் திண்டுக்கலுக்கு அமைச்சராகி வருவதில் பெரும் மகிழ்ச்சியடைகிறேன்.
தெளியவைத்து, தெளியவைத்து அடித்தார்கள் என ஒரு படத்தில் வரும் வசனம் போல கடந்த இரண்டு நாள்களாக தொடர்ந்து நிகழ்ச்சிகளில் பங்கேற்று வருகிறேன். இருப்பினும் இந்த நிகழ்ச்சியில் பங்கேற்றதும் எனக்கு தெம்பு கிடைத்துவிட்டது. ஏனென்றால் கட்சி வெற்றியின்போதும் தோல்வியின்போது தொடர்ந்து பயணிப்பவர்கள் தொண்டர்கள்தான். நாங்கள் பிரசாரம் செய்துவிட்டு அடுத்த தொகுதிக்குச் சென்றுவிடுவோம். ஆனால் வாக்காளரை வாக்குச்சாவடி வரை அழைத்துச் சென்று ஓட்டுப்போட வைப்பது தொண்டன் மட்டுமே.
தமிழகத்தில் தி.மு.க-வுக்கு மட்டுமே வரலாறு உள்ளது. அ.தி.மு.க-வுக்கு வரலாறும் கிடையாது, கொள்கையும் கிடையாது. அ.தி.மு.க-வினர் சந்தர்ப்பவாதிகள். ஆட்சியில் இருக்கும்போது ஒருங்கிணைப்பாளர், இணை ஒருங்கிணைப்பாளர் என இணைந்தும், ஆட்சியில் இல்லாதபோது அடித்துக் கொண்டும் இருக்கின்றனர்.
சட்டப்பேரவைக் கூட்டத்தின்போது தவறுதலாக எனது காரில் ஏற முயன்றவரிடம், நகைச்சுவையாக வேண்டுமென்றால் ஏறிச் செல்லுங்கள். ஆனால் கமலாலயம் சென்றுவிடாதீர்கள் என்றேன். இப்போதும் அவர்கள் அங்கே சென்று கொண்டிருக்கிறார்கள். கேடுகெட்டவர்களாக அ.தி.மு.க-வினர் உள்ளனர்.
நாட்டின் சிறந்த முதல்வராக ஸ்டாலின் உள்ளார். ஒரு சர்வே முடிவில் இவ்வாறு கூறப்பட்டது. ஆனால் அதைக்கூட அவர் ஏற்றுக்கொள்ளாமல் நாட்டை முதல் மாநிலமாக ஆக்க வேண்டும் என உழைத்துக் கொண்டிருக்கிறார். தேர்தலின்போது அளித்த வாக்குறுதிகளை ஒவ்வொன்றாக நிறைவேற்றி வருகிறார். தற்போதுகூட பொங்கல் பரிசு அறிவித்துள்ளார். எனவே தி.மு.க தொண்டர்கள் கடந்த 2021-ல் தி.மு.க-வை வெல்ல வைத்தது போல 2024 தேர்தலிலும் வெல்ல வைக்க வேண்டும்” என்றார்.
முன்னதாக இடையகோட்டையில் நடந்த விழாவில், “அ.தி.மு.க முன்னாள் வனத்துறை அமைச்சர் சீனிவாசன் அம்மா, இட்லி சாப்பிட்டார், சாம்பார் சாப்பிட்டார் என அளந்துவிட்டார். ஆப்பிளுக்கும் மாம்பழத்துக்கும் வித்தியாசம் தெரியாதவர். தற்போது தி.மு.க வனத்துறைக்கு இளம் டாக்டர் மதிவேந்தனை ஸ்டாலின் நியமித்துள்ளார். இங்கு நடக்கும் இந்த நல்ல நிகழ்ச்சியை தடுப்பதற்கு பா.ஜ.க-வினர் முயன்றுள்ளனர். உயர் நீதிமன்றம் அவர்களின் தலையில் கொட்டி அனுப்பியிருக்கிறது. முதல்வர் ஸ்டாலின் கூறியதைப் போல பசுமை தமிழகமாக மாற தொடர்ந்து செயல்படுவோம்” என்றார்.