சீனாவில் பரவி வரும் பிஎஃப்.7
கொரோனா வைரஸ்
உலக நாடுகள் மத்தியில் மீண்டும் அச்சத்தை ஏற்படுத்தி உள்ளது. இது தொடர்பாக டெல்லியில் பிரதமர் மோடி தலைமையில் நடந்த உயர்மட்ட ஆலோசனைக்கூட்டத்தில் தமிழ்நாடு உள்ளிட்ட அனைத்து மாநிலங்களும் கலந்து கொண்டு தங்களது ஆலோசனையை வழங்கின.
இந்த நிலையில், பிஎஃப்.7 கொரோனா வைரஸ் தொடர்பாக மாநில சுகாதாரத் துறை அமைச்சர்களுடன் மத்திய சுகாதாரத் துறை அமைச்சர் மன்சுக் மாண்டவியா கலந்துரையாடியபோது, ‘மாநிலங்கள் விழிப்புடன் இருப்பதோடு, கொரோனாவை கட்டுப்படுத்த தயார் நிலையில் இருக்க வேண்டும்.
இதற்கு முன்பு கொரோனா பரவலை தடுக்க பணியாற்றியது போலவே தற்போதும் மத்திய, மாநில அரசுகள் ஒருங்கிணைந்து பணியாற்ற வேண்டும். கொரோனா கண்காணிப்புகளை தீவிரப்படுத்தி சோதனையை அதிகப்படுத்த வேண்டும். மருத்துவமனை உட்கட்டமைப்பு வசதிகளை உறுதி செய்ய வேண்டும் என அறிவுறுத்தி உள்ளார்.
இதன் தொடர்ச்சியாக, இந்தியாவில் இது தொடர்பான முன்னெச்சரிகை நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு உள்ளன. இதன் ஒரு பகுதியாக வெளிநாட்டு விமான பயணிகள் கண்காணிக்கப்பட்டு வருகின்றனர்.
இந்நிலையில் மத்திய சுகாதாரத் துறை செயலாளர் ராஜேஷ் பூஷன் அனைத்து மாநிலங்களின் தலைமைச்செயலாளர்கள் மற்றும் மாநில அதிகாரிகளுக்கு அவசர கடிதம் ஒன்று அனுப்பி உள்ளார்.
அந்த கடிதத்தில் மத்திய சுகாதாரத் துறை செயலாளர் ராஜேஷ் பூஷன் கூறியிருப்பதாவது:
கொரோனா பரிசோதனையை அனைத்து மாவட்டங்களிலும் போதிய அளவு மேற்கொள்ள வேண்டும். கொரோனா உறுதியான மாதிரிகளை மரபணு ஆய்வகத்திற்கு உடனடியாக அனுப்ப வேண்டும்.
உருமாற்றம் பெற்ற கொரோனா இருப்பது கண்டுபிடிப்பதற்கு, இந்த பரிசோதனை பயன்படும். சீனாவில் பி.எப் 7 கொரோனா அதிகளவில் தாக்கத்தை ஏற்படுத்தும் நிலையில் இந்தியாவில் தற்போது 10 வகையான உருமாறிய கொரோனா தொற்று இருப்பதும், மேலும் பிஎப் 7 இருப்பதை கண்டறியவும் மரபணு ஆய்வு உதவும்.
மேலும் மருத்துவமனையில் போதுமான அளவுக்கு படுக்கைகள், உபகரணங்கள் இருப்பதையும் உறுதிப்படுத்த வேண்டும். முன்கள பணியாளர்கள் மற்றும் மருத்துவ பணியாளர்கள் தயார் நிலையில் வைத்திருக்க வேண்டும்.
பண்டிகை காலம் என்பதால் பொது இடங்களில் மக்கள் அதிகம் கூடுவதை கட்டுப்படுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும். இது தவிர, பொது இடங்களில் மக்கள் மாஸ்க் அணிவதை உறுதிப்படுத்த வேண்டும். இவ்வாறு அந்த கடிதத்தில் கூறப்பட்டுள்ளது.