மிரட்ட வரும் கனமழை.. கலெக்டர்களுக்கு பறந்தது உத்தரவு!

வங்க கடலில் உருவான மாண்டஸ் புயல், கடந்த 9 தேதி இரவு முதல் மெல்ல மெல்ல கரையை கடக்க துவங்கியது. முன்னதாக மாண்டஸ் புயல் மாமல்லபுரத்திற்கும், புதுச்சேரிக்கும் இடையே நள்ளிரவு கரையை கடக்கும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்து இருந்தது.

இதன் காரணமாக சென்னை – வண்டலூர் கேளம்பாக்கம் சாலையில் தொடங்கி கோவளம், திருப்போரூர், படூர் உள்ளிட்ட பழைய மகாபலிபுரம் சாலை பகுதிகளில் கனமழையுடன் பலத்த காற்று வீசியது.

அதிகாலை 3 மணிக்கு கிட்டத்தட்ட மாண்டஸ் புயல் முடிவுக்கு வந்தது. இதன் பிறகு லேசான காற்று வீசியது. மாண்டஸ் புயலால் சென்னையின் பல்வேறு பகுதியில் மரங்கள் வேரோடு சாய்ந்தன.

அத்துடன் இல்லாமல் மின் கம்பங்கள், சிக்னல் கம்பங்கள் பெரிதும் பாதிக்கப்பட்டன. கோவளம் கடற்கரை பகுதியில் இருந்த கடைகள் காற்றின் வேகத்தால் பலத்த சேதம் அடைந்தன.

திருவள்ளூர் மாவட்டம் காட்டுப்பாக்கத்தில் அதிகபட்சம் 142 மில்லி மீட்டர்
மழை
பதிவானது. நள்ளிரவு 12 மணிக்கு செய்தியாளர்களை சந்தித்த சென்னை வானிலை ஆய்வு மைய தென்மண்டல இயக்குநர் பாலச்சந்திரன் மழை பொழிவு குறித்த தகவலை வெளியிட்டார்.

அதன்படி, காட்டுப்பாக்கத்தில் 142 மில்லி மீட்டரும், சென்னை நுங்கம்பாக்கத்தில் 106 மில்லி மீட்டர் மழையும் பதிவானதாக கூறினார். மேலும், மீனம்பாக்கத்தில் 103 மில்லி மீட்டரும், மாதவரத்தில் 87 மில்லி மீட்டரும், திருவள்ளூரில் 83 மில்லி மீட்டர் மழையும் பதிவானதாக கூறினார்.

இந்த மாண்டஸ் புயல் தாக்கத்தினால் கடுமையான காற்று வீசியதன் எதிரொலியாக சென்னை, செங்கல்பட்டு, காஞ்சிபுரம், புதுச்சேரி ஆகிய பகுதிகளைச் சேர்ந்த பொதுமக்கள் மிகுந்த அச்சத்துக்கு உள்ளாகி போயினர்.

இந்நிலையில் காற்றழுத்து தாழ்வு மண்டலம் காரணமாக தமிழகத்தில் வரும் 25 மற்றும் 26ம் தேதிகளில்
கனமழை
எச்சரிக்கை விடுக்கப்பட்டு உள்ளது. இது குறித்து பேரிடர் மேலாண்மை துறை வெளியிட்டு இருக்கும் அறிக்கையில் கூறப்பட்டுள்ளதாவது:

காற்றழுத்து தாழ்வு மண்டலம் காரணமாக தமிழகத்தில் வரும் 25 மற்றும் 26ம் தேதிகளில் கனமழை பெய்யும் என எதிர்பார்க்கப்படுகிறது. எதிர் வரும் கனமழையை எதிர்கொள்ள அனைத்து முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளையும் மேற்கொள்ள மாவட்ட ஆட்சியர்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.

அணைகள் மற்றும் நீர்த்தேக்கங்களில் நீர் இருப்பு, நீர் வரத்து ஆகியவை தொடர்ந்து கண்காணிக்கப்பட வேண்டும். கடலுக்கு மீன் பிடிக்க சென்ற மீனவர்கள் உடனே கரை திரும்ப வேண்டும்.

மேலும், பலத்த காற்று மற்றும் கடல் கொந்தளிப்பு காரணமாக மீனவர்கள் கடலுக்குச் செல்வதையும் தவிர்க்க வேண்டும். தாழ்வான பகுதிகளில் வசிக்கும் மக்களை முன்கூட்டியே மீட்டு நிவாரண முகாம்களில் தங்க வைக்க வேண்டும்.

இதற்காக அந்தந்த பகுதிகளில் தேசிய பேரிடர் மீட்பு படை மற்றும் தமிழ்நாடு பேரிடர் மீட்புப் படையின் குழுக்கள் தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ளன. இவ்வாறு பேரிடர் மேலாண்மை துறை வெளியிட்டு இருக்கும் அறிக்கையில் கூறப்பட்டுள்ளது. இதன் மூலம் மீண்டும், ஒரு சம்பவம் நடக்க போவது உறுதியாகி இருப்பதாகவே பலரும் கருத்து தெரிவிக்கின்றனர்.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.