சீனாவில் தினசரி 10 லட்சம் பேருக்கு கொரோனா  5,000 பேர் உயிரிழப்பு: | 5,000 people die of corona in China every day for 10 lakh people: cemeteries are full

பீஜிங்: சீனாவில் இதுவரை இல்லாத அளவில் கொரோனா தொற்று மிக தீவிரமாக பரவி வருகிறது. நாள் ஒன்றுக்கு 10 லட்சம் பேர் தொற்றால் பாதிக்கப்படுவதுடன், 5,000 பேர் உயிரிழக்கின்றனர்.
படுக்கை வசதி இன்றி மருத்துவமனைகள் நிரம்பி வழிகின்றன. மயானங்களில், குவியல் குவியல்களாக உடல்கள் காத்திருக்கும் பரிதாப நிலை உருவாகி உள்ளது.
நம் அண்டை நாடான சீனாவில், கடந்த சில மாதங்களாக கொரோனா தொற்று பரவல் மீண்டும் அதிகரிக்க துவங்கியது. அரசு கடுமையான ஊரடங்கு உத்தரவை பிறப்பித்ததை எதிர்த்து, மக்கள் போராட்டம் வெடித்தது.

இதையடுத்து, அரசு கட்டுப்பாடுகளை தளர்த்தியது. இதன் விளைவாக, கொரோனா பரவல் உச்சத்தை தொட்டது.
நாள் ஒன்றுக்கு 10 லட்சம் பேர் தொற்று பாதிப்புக்கு ஆளாவதாகவும், 5,000 பேர் வரை உயிரிழப்பதாகவும் தகவல் வெளியாகி உள்ளது.
தொற்றால் பாதிக்கப்பட்டவர்கள் மருத்துவமனையில் குவிந்த வண்ணம் உள்ளனர். அவர்களுக்கு சிகிச்சை அளிக்க தேவையான படுக்கை வசதி மற்றும் பணியாளர்கள் இன்றி மருத்துவமனைகள் திணறி வருகின்றன.

சீனாவின் பரிதாப நிலை குறித்து அந்நாட்டை சேர்ந்த மனித உரிமை ஆர்வலர் ஜெனிபர் ஸெங் என்பவர், தன் சமூக வலைதளத்தில் புகைப்படங்கள், ‘வீடியோ’க்களுடன் தகவல்களை வெளியிட்டு வருகிறார்.
இவை உலக நாடுகளிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.சீனாவின் சிச்சுவான் மாகாணத்தில் உள்ள சாங்குயிங் மருத்துவ பல்கலை மருத்துவமனையில், கொரோனாவுக்கு சிகிச்சை பெற வந்தவர்கள் இடமின்றி வெறும் தரையில் படுக்க வைக்கப்பட்டுள்ள புகைப்படத்தை அவர் வெளியிட்டுள்ளார்.

இதே பல்கலையில் படிக்கும் 23 வயதான மருத்துவ மாணவருக்கு தொற்று உறுதியான நிலையில் அவரை பணியாற்ற பல்கலை நிர்வாகம் நிர்பந்தித்ததை தொடர்ந்து, கடந்த 13ம் தேதி அவர் உயிரிழந்த தகவலையும் அவர் பகிர்ந்துள்ளார்.கொரோனாவால் உயிரிழந்தோர் உடல்கள் குவியல் குவியல்களாக சீன மயானங்களில் காத்திருக்கின்றன.

இதன், ‘வீடியோ’ வையும் ஜெனிபர் வெளியிட்டுள்ளார். மஞ்சள் நிற பையில் வைத்து மூடப்பட்ட உடல்கள் மயானம் முழுதும் நிரம்பிக் கிடக்கின்றன. இதை எரியூட்ட எடுத்து செல்லும் இரண்டு பணியாளர்கள் பாதுகாப்பு உடைகள் அணியாமல் இருந்தனர். ஏன் அணியவில்லை என, அவர்களிடம் கேள்வி எழுப்பப்பட்டது.

இதற்கு, தங்களுக்கு ஏற்கனவே தொற்று உறுதியாகி இருப்பதாக அவர்கள் தெரிவிக்கின்றனர்.

ஷென்யாங் நகரின் மயானம் ஒன்றில், இடம் இல்லாத காரணத்தினால் உடல் ஒன்று மயானத்திற்கு வெளியே சாலையில் கிடத்தி வைக்கப்பட்டுள்ள புகைப்படமும் வெளியாகி உள்ளது.

சீன அரசு, சுவாசக் கோளாறால் நிகழும் உயிரிழப்புகளை மட்டுமே கொரோனா மரணங்களாக பதிவு செய்து வருகிறது. தொற்று பாதிப்புக்கு ஆளாகி சுவாக்கோளாறு இன்றி நிகழும் உயிரிழப்புகளை சீன அரசு கொரோனா மரணங்களில் சேர்ப்பதில்லை என்றும் கூறப்படுகிறது.


புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.