மதுரை டூ கோவை… ரயில் பயணிகளுக்கு செம ஹேப்பி நியூஸ்!

மதுரை – கோயம்புத்தூர் விரைவு ரயில் (16722) தற்போது மதுரையிலிருந்து காலை 07.25 மணிக்கு புறப்பட்டு மதியம் 12.45 மணிக்கு கோயம்புத்தூர் சென்று சேருகிறது. இந்த ரயிலின் வேகம் டிசம்பர் 25 முதல் அதிகரிக்கப்பட்டு கோயம்புத்தூருக்கு மதியம் 12.15 மணிக்கு சென்று சேருமாறு கால அட்டவணை மாற்றி அமைக்கப்பட்டுள்ளது. இதன் மூலம் 30 நிமிடம் பயண நேரம் குறைகிறது.

எனவே இந்த ரயில் ஒட்டன்சத்திரம், சத்திரப்பட்டி, பழனி, புஷ்பத்தூர், மடத்துக்குளம், மைவாடி ரோடு, உடுமலைப்பேட்டை, கோமங்கலம், பொள்ளாச்சி, கிணத்துக்கடவு, போத்தனூர் ஆகிய ரயில் நிலையங்களில் முறையே காலை 09.15, 09.24, 09.40, 08.53, 10.01, 10.06, 10.15, 10.28, 10.53, 11.05, 11.30 மணிக்கு புறப்படுகிறது. இந்த ரயில் நிலையங்களில் நடப்பிலிருக்கும் கால அட்டவணைப்படி உள்ள புறப்படும் நேரத்திற்கு மேலும் முன்னதாக புறப்படும்படி மாற்றப்பட்டுள்ளது.

மறு மார்க்கத்தில் கோயம்புத்தூர் – மதுரை விரைவு ரயில் (16721) கோயம்புத்தூரில் இருந்து மதிய 02.05 மணிக்கு புறப்பட்டு இரவு 07.35 மணிக்கு மதுரை வந்து சேர்ந்தது. தற்போது இந்த ரயிலின் கோயம்புத்தூர் புறப்படும் நேரம் மதியம் 02.40 மணியாக மாற்றப்பட்டுள்ளது. புறப்படு நேரம் மாற்றப்பட்டுள்ளதால் 35 நிமிட பயண நேரம் குறைக்கப்பட்டுள்ளது. மதுரை வந்து சேரும் நேரத்தில் எந்த மாற்றமும் இல்லை என்று தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது.

ரயில் போக்குவரத்து ரத்து:
பாம்பன் ரயில் பாலத்தில் நடைபெறும் பராமரிப்பு பணிகள் காரணமாக சென்னையில் இருந்து டிசம்பர் 23, 24 ஆகிய நாட்களில் புறப்பட வேண்டிய ராமேஸ்வரம் விரைவு ரயில்கள் (மெயின் லைன், கார்ட் லைன் ரயில்கள்) மற்றும் டிசம்பர் 24, 25 ஆகிய நாட்களில் ராமேஸ்வரத்தில் இருந்து புறப்பட வேண்டிய சென்னை எழும்பூர் விரைவு ரயில்கள் (மெயின் லைன், கார்ட் லைன் ரயில்கள்) ராமேஸ்வரம் – மண்டபம் இடையே பகுதியாக ரத்து செய்யப்படுகிறது.

டிசம்பர் 24 மற்றும் 25 அன்று திருச்சி – ராமேஸ்வரம் – திருச்சி மற்றும் அனைத்து மதுரை – ராமேஸ்வரம் – மதுரை விரைவு ரயில்கள் இரு மார்க்கத்திலும் ராமநாதபுரம் – ராமேஸ்வரம் இடையே பகுதியாக ரத்து செய்யப்படுகிறது.

அதேபோல இதே காலத்தில் புறப்பட வேண்டிய வருகை தரவேண்டிய வாராந்திர விரைவு ரயில்களும் ராமேஸ்வரம் – மண்டபம் ரயில் நிலையங்களுக்கிடையே பகுதியாக ரத்து செய்யப்படுகிறது. ராமேஸ்வரம் – ஹூப்ளி – ராமேஸ்வரம் வாராந்திர சேவை ரயில் மட்டும் ராமநாதபுரம் – ராமேஸ்வரம் இடையே பகுதியாக ரத்து செய்யப்படுகிறது.

பயணிகளின் வசதிக்காக ராமேஸ்வரம் ரயில் நிலையத்தில் உதவி மையம் 9360548465 அலைபேசி எண்ணுடனும், மண்டபம் ரயில் நிலையத்தில் உதவி மையம் 9360544307 என்ற அலைபேசி எண்ணுடனும் செயல்படுகிறது.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.