புதுச்சேரி: கரோனா பரிசோதனை புதுச்சேரியில் அதிகரிக்கப்படவுள்ளது. தற்போது 3620 தடுப்பூசிகள் கையிருப்பில் உள்ளன. கரோனா பரவலைக் கட்டுப்படுத்த கூடுதலாக 50 ஆயிரம் தடுப்பூசிகள் தேவை. அதை மத்திய அரசு தரவேண்டும் என்று புதுச்சேரி அரசு வலியுறுத்தியுள்ளது.
சீனாவில் கரோனா மீண்டும் அதிகரித்தால், இந்தியாவிலும் பரவலைக் கட்டுப்படுத்த மேற்கொள்ளப்பட வேண்டியவை குறித்து மத்திய சுகாதாரத்துறை அமைச்சர் மான்சுக் மாண்டாவியா, அனைத்து மாநில சுகாதார அமைச்சர்களுடன் மெய்நிகர் காட்சி வாயிலாக இன்று ஆலோசனை மேற்கொண்டார். இந்த ஆலோசனை கூட்டத்தில் முதல்வர் ரங்கசாமி, புதுச்சேரி சட்டப்பேரவையில் கணொலி காட்சி வாயிலாக கலந்து கொண்டார். இக்கூட்டத்தில் அமைச்சர்கள் லட்சுமி நாராயணன், தேனீ ஜெயக்குமார், அரசு செயலர் உதயகுமார், சுகாதாரத் துறை இயக்குநர் .ஸ்ரீராமுலு ஆகியோர் உடனிருந்தனர்.
இந்த கூட்டத்தில் கரோனா பரிசோதனைகளை அதிகப்படுத்துவது, மீண்டும் தடுப்பூசி இருப்பை அதிகரிப்பது படுக்கை மற்றும் ஆக்சிஜன் கையிருப்பு உள்ளிட்ட சுகாதார முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை உறுதி செய்வது உள்ளிட்டவை குறித்து ஆராயப்பட்டன. மேலும், பொதுமக்கள் முகக்கவசம் அணிதல், சமூக இடைவெளியைக் கடைபிடித்தல் மற்றும் கைகளை அடிக்கடி சோப்பு போட்டு கழுவுதல் ஆகிய கரோனா தடுப்பு நெறிமுறைகளை அவசியம் பின்பற்ற அறிவுறுத்துவது குறித்தும் இக்கூட்டத்தில் ஆராயப்பட்டது.
இக்கூட்டத்தில் புதுச்சேரி அரசு தரப்பில், “கரோனா பரவலை எதிர்கொள்ள புதுச்சேரி அரசு அனைத்து நிலைகளிலும் தயார்நிலையில் உள்ளது. புதுச்சேரியில் கரோனா மருத்துவமனை போதிய அனைத்து வசதிகளுடன் உள்ளது. மத்திய அரசு காட்டும் அனைத்து வழிமுறைகளையும் புதுச்சேரி அரசு பின்பற்றும். புதுச்சேரியில் கரோனா பரிசோதனைகள் அதிகரிக்கப்படும். தற்போது 3,620 தடுப்பூசிகள் கையிருப்பில் உள்ளது. கரோனா பரவலைக் கட்டுப்படுத்த கூடுதலாக 50,000 தடுப்பூசிகள் தேவை. அதை மத்திய அரசு வழங்க வேண்டும்” என்றும் கோரிக்கை வைக்கப்பட்டது.
இதுதொடர்பாக அதிகாரிகள் கூறுகையில், “உருமாறும் கரோனா வைரஸை கண்டறிவதற்கான பரிசோதனைக் கூடம் புதுச்சேரி கரோனா மருத்துவமனையில் வரும் 28-ம் தேதி முதல்வர் தொடங்கி வைக்கவுள்ளார்” என்று தெரிவித்தனர்.