திருச்சி: பூலோக வைகுண்டம் என்று போற்றப்படும் திருச்சி ஸ்ரீரங்கம் ரங்கநாதர் கோயிலில் மார்கழி மாதம் நடைபெறும் வைகுண்ட ஏகாதசி விழா சிறப்புமிக்கது. பகல்பத்து, ராப்பத்து என மொத்தம் 21 நாட்கள் இந்த விழா நடைபெறும். திருநெடுந்தாண்டகம் நிகழ்ச்சியுடன் நேற்றுமுன்தினம் தொடங்கியது.
பகல்பத்து உற்சவத்தின் முதல் நாளான திருமொழி திருவிழா நேற்று தொடங்கியது. நம்பெருமாள் அதிகாலை 5.30 மணிக்கு அர்ச்சுன மண்டபம் வந்தடைந்தார். நாலாயிரம் திவ்ய பிரபந்த பாடல்களை அபிநயம் மற்றும் இசையுடன் அரையர்கள் பாடினர்.பின்னர் மாலை 7 மணிக்கு அர்ச்சுன மண்டபத்தில் இருந்து நம்பெருமாள் புறப்பட்டு இரவு 9.45 மணிக்கு மூலஸ்தானம் சென்றடைவார். பகல்பத்து உற்சவத்தின் முதல் நாளான நேற்று மூலவர் ரங்கநாதர் முத்தங்கி சேவையில் காட்சியளித்தார். 10வது நாளான ஜனவரி 1ம் தேதி நம்பெருமாள் நாச்சியார் திருக்கோலம் எனப்படும் மோகினி அலங்காரத்தில் எழுந்தருளி பக்தர்களுக்கு சேவை சாதிப்பார்.
ராப்பத்து உற்சவத்தின் முதல் நாளான வரும் ஜனவரி 2ம் தேதி வைகுண்ட ஏகாதசி திருநாள் ஆகும். அன்று அதிகாலை 3.30 மணிக்கு நம்பெருமாள் மூலஸ்தானத்தில் இருந்து புறப்பட்டு அதிகாலை 4.45 மணிக்கு பரமபதவாசல் எனப்படும் சொர்க்கவாசலில் எழுந்தருளுவார். சொர்க்கவாசல் 3ம் தேதி முதல் 7ம் தேதி வரை பகல் 1 மணி முதல் இரவு 8 மணி வரை திறந்திருக்கும். 8ம் தேதி மாலை 4 மணி முதல் இரவு 8.30 மணி வரை திறந்திருக்கும்.