சண்டிகர்,
பஞ்சாப் மாநிலத்தில் இந்த ஆண்டு நடைபெற்ற சட்டசபை தேர்தலில் ஆம் ஆத்மி கட்சி மாபெரும் வெற்றி பெற்றது. இதையடுத்து கடந்த மார்ச் மாதம் பஞ்சாப் முதல்-மந்திரியாக பகவந்த் மான் பதியேற்றுக் கொண்டார். இந்நிலையில் ஆம் ஆத்மியின் 9 மாத கால ஆட்சியில் பஞ்சாபில் தொழில் முதலீடுகள் அதிகரித்துள்ளதாக பகவந்த் மான் கூறியுள்ளார்.
அமிர்தசரஸ் நகரில் இன்று நடைபெற்ற அரசு நிகழ்ச்சியில் கலந்து கொண்டு பேசிய அவர், பஞ்சாப் மாநில அரசின் கொள்கைகள் தொழில் மற்றும் வர்த்தகத்திற்கு சாதகமான சூழலை ஏற்படுத்தி உள்ளதாகவும், கடந்த 9 மாதங்களில் பஞ்சாப் மாநிலம் சுமார் 30 ஆயிரம் கோடி ரூபாய் மதிப்பிலான தொழில் முதலீடுகளை ஈர்த்துள்ளது என்றும் அவர் கூறினார்.
குறிப்பாக இரும்பு தொழிற்சாலை நிறுவனங்கள், உணவு பதப்படுத்துதல், விவசாயம், ஜவுளி தொடர்பான நிறுவனங்கள் பஞ்சாப் மாநிலத்தில் முதலீடு செய்ய ஆர்வம் காட்டு வருவதாக அவர் தெரிவித்தார். மேலும் மாநில அரசு ஊழலை முற்றிலுமாக அழித்துவிட்டதாகவும், இதன் காரணமாக தொழில் நிறுவனங்கள் பஞ்சாபில் முதலீடு செய்வதை விரும்புவதாகவும் பகவந்த் மான் தெரிவித்துள்ளார்.