டெல்லி: ஐசிஐசிஐ வங்கியின் முன்னாள் தலைமை செயல் அதிகாரி சந்தா கோச்சார் மற்றும் கணவர் தீபக் கோச்சார் ஆகியோரை சிபிஐ கைது செய்தது.
இந்தியாவின் மிகப்பெரிய தனியார் வங்கியான ஐ.சி.ஐ.சி.ஐ. வங்கியின் தலைமை செயல் அதிகாரியாக இருந்தவர் சந்தா கோச்சார். தலைமைச் செயல் அதிகாரியாக சந்தா கோச்சார் பதவி வகித்தபோது அதிகார துஷ்பிரயோகத்தில் ஈடுபட்டு வீடியோகான் குழுமத்துக்கு விதிமுறைகளை மீறி ரூ.3,250 கோடி கடன் வழங்கப்பட்டது. இதன் மூலம், அவரது கணவர் தீபக் கோச்சார் பலனடைந்ததாக புகார் எழுந்தது. ஐசிஐசிஐ வங்கி இதுதொடர்பாக கடந்த 2018 மே மாதத்தில் விசாரணையை தொடங்கியது. குற்றச்சாட்டு உறுதியானதைத் தொடர்ந்து சந்தா கோச்சாரை பணிநீக்கம் செய்து உத்தரவிட்டது.
இந்த முறைகேடு தொடர்பாக சந்தா மற்றும் அவரது கணவரும், தொழில் அதிபருமான தீபக் கோச்சார் உள்ளிட்டோர் மீது சி.பி.ஐ. மற்றும் அமலாக்கத்துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர். இந்த விவகாரத்தில் சந்தா மற்றும் தீபக் வசம் உள்ள ரூ.78 கோடி சொத்துகளை அமலாக்கத்துறை ஏற்கனவே முடக்கியுள்ளது.
இதனிடையே, இந்த வழக்கில் சந்தா கோச்சார் மற்றும் அவரின் கணவர் தீபக் கோச்சார் இருவரையும் சிபிஐ கைது செய்துள்ளது. டெல்லியில் வைத்து இருவரும் கைது செய்யப்பட்டுள்ளனர். வழக்கின் விசாரணைக்கு ஆஜராக சம்மன் அனுப்பப்பட்ட நிலையில் இருவரிடம் சிபிஐ தலைமையகத்தில் விசாரணை நடந்துவந்தது. ஆனால், விசாரணைக் குழுவிற்கு ஒத்துழைக்காததை அடுத்து இருவரும் கைது செய்யப்பட்டுள்ளனர் என்று முதல்கட்ட தகவல் வெளியாகியுள்ளது.