புதுடெல்லி: ராமேஸ்வரம் கடல் பகுதியில் ராமர் பாலம் இருந்ததாக உறுதியாக கூறமுடியாது என்று மாநிலங்களவையில் ஒன்றிய அமைச்சர் தெரிவித்தார். மாநிலங்களவையில் அரியானாவை சேர்ந்த சுயேச்சை உறுப்பினர் கார்த்திகேய சர்மா, ராமர் பாலம் பற்றி அறிவியல் பூர்வமாக நடத்தப்பட்ட ஆய்வுகளின் முடிவுகள் பற்றி கேள்வி எழுப்பினார்.
இதற்கு விண்வெளி மற்றும் அறிவியல் தொழிநுட்பத்துறை இணை அமைச்சர் ஜிஜேந்திர சிங் அளித்த பதில்: பண்டைய காலம் பற்றிய தகவல்களை கண்டறிய நவீன தொழிநுட்பங்களை பயன்படுத்தி ஆய்வுகள் நடத்தப்படுகின்றது. 18,000 ஆண்டுகளுக்கு முந்தைய வரலாறு என்பதால் ராமர் பாலம் பற்றிய தகவல்களை கண்டறிவதில் சிக்கல்கள் உள்ளது. புராணத்தின்படி 56 கி.மீ நீளத்துக்கு பாலம் இருந்ததாக நாம் கருதுகிறோம்.
செயற்கைகோள் படங்கள் மூலம் கடலில் சில பாறைகள் தொடர்ச்சியாக இருப்பது தெரியவந்துள்ளது. தீவுகள் மற்றும் சுண்ணாம்புக்கல் திட்டுகள் கடலில் உள்ளது. இதை கொண்டு ராமர் பாலம் இருந்ததாக உறுதியாக கூற முடியாது. அதே நேரத்தில் ஒரு அமைப்பு அங்கு இருந்திருக்கலாம்.ராமேஸ்வரம் கடற்பகுதியில் இருந்தது எந்த மாதிரி கட்டுமானம் என்பதை கூறுவது கடினம். இவ்வாறு அமைச்சர் கூறியுள்ளார்.