அரசு இணையதளங்கள் வழியே இந்தியை புகுத்துவதா?: மக்களவையில் தயாநிதி மாறன் எம்.பி ஆவேசம்

புதுடெல்லி: ஒன்றிய அரசு அமைச்சகங்களின் இணையதளங்கள் வழியாக இந்தியை புகுத்துவதா? என்று மக்களவையில் தயாநிதி மாறன் எம்.பி ஆவேசமாக கேள்வி எழுப்பினார். மத்திய சென்னை நாடாளுமன்ற உறுப்பினர் தயாநிதி மாறன், மக்களவையில் நேற்று எழுப்பிய கேள்வி வருமாறு:  

ஒன்றிய வீட்டு வசதி மற்றும் நகர்ப்புற விவகாரங்கள் துறை அமைச்சகத்தின் இணையதளத்தில், இயல்பு மொழியாக இருந்த  ஆங்கிலத்தை மாற்றி இந்தியை புகுத்தியுள்ளது ஏன் என்றும், இந்த நடவடிக்கையால் அந்த இணையதளத்தை பயன்படுத்தும்  இந்தி மொழி அறியாத பெரும்பான்மை மக்கள் சிரமப்படுகிறார்களா என்றும் அவ்வாறெனில் இந்த மாற்றத்திற்கான காரணங்களை தெரியப்படுத்தவும்.

அமைச்சகத்தின் இணையதளம் அல்லது அதன்கீழ் வரும் பொதுப்பணித்துறை உள்ளிட்ட பல்வேறு துறைகளின் இணையதளங்கள் பார்வையாளர்களை ஆங்கிலம் அல்லது இந்தி மொழியில் வரவேற்பது ஏன்? அதன் காரணங்களை தெரியப்படுத்தவும்.

இதே இணையதளங்களில் தமிழ், மலையாளம், தெலுங்கு, கன்னடம், பெங்காலி போன்ற மொழிகளும் இடம்பெற்றுள்ளனவா என்றும் இல்லையெனில் அதற்கான காரணங்கள் என்ன?  இணையதளத்தை பயன்படுத்தும் இந்தி பேசாத பயனர்கள் தகவல்களை எளிதாக அணுகுவதற்கு மேற்கொள்ளப்பட்ட நடவடிக்கைகள் என்ன? என்று கேள்வி எழுப்பினார்.

இதற்கு ஒன்றிய வீட்டு வசதி மற்றும் நகர்ப்புற விவகாரங்கள் துறை இணை அமைச்சர்  கவுசல் கிஷோர்  அளித்த பதிலில் “ஒன்றிய அலுவல் மொழிகள் துறையின் வழிகாட்டுதலின்படி, அமைச்சகம் மற்றும் அதன் கட்டுப்பாட்டில் உள்ள அனைத்து துறைகளின் இணையதளங்களும் 2 மொழிகளில்  செயல்படுகின்றன.

ஒன்றிய வீட்டு வசதி மற்றும் நகர்ப்புற விவகாரங்கள் துறை அமைச்சகம் மற்றும் பொதுப்பணித்துறையின் இணையதளங்கள் இந்தியில் உள்ளது. அத்துடன்  ஆங்கிலத்திற்கான விருப்ப வசதியும் வழங்கப்பட்டுள்ளது. எனவே இந்தி பேசாத மக்களுக்கு புரிந்துகொள்வதில் சிரமம் ஏற்படாது” என்று  கூறியுள்ளார்.  இணையதளங்களில் தமிழ், மலையாளம், தெலுங்கு, கன்னடம், பெங்காலி போன்ற மொழிகள் இடம்பெற்றுள்ளனவா என்றும் இல்லையெனில் அதற்கான காரணங்கள் என்ன என்ற கேள்விக்கு அமைச்சர் பதிலளிக்கவில்லை.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.