மகாராஷ்டிராவில் ஏக்நாத் ஷிண்டே தலைமையிலான அரசு பதவிக்கு வந்தவுடன் உத்தவ் தாக்கரே ஆட்சிக்காலத்தில் எடுக்கப்பட்ட அனைத்து முக்கிய முடிவுகளும் ரத்து செய்யப்பட்டது. அதோடு தாக்கரே குடும்பத்தினருக்கு எதிரான விசாரணையும் தீவிரம் அடைந்துள்ளது. ஏற்கனவே உத்தவ் தாக்கரேயின் மகன் ஆதித்ய தாக்கரேயிக்கு நடிகர் சுஷாந்த் சிங் மேலாளர் திஷா சாலியன் மரணத்தில் தொடர்பு இருக்கிறதா என்பதை விசாரிக்க சிறப்பு விசாரணைக்குழு அமைக்கப்படும் என்று சட்டமன்றத்தில் அரசு அறிவித்துள்ளது. இதில் ஆதித்ய தாக்கரேயிடம் உண்மை கண்டறியும் சோதனை நடத்தப்படவேண்டும் என்று நிதேஷ் ராணே எம்.எல்.ஏ.கோரிக்கை விடுத்துள்ளார்.
தற்போது உத்தவ் தாக்கரே மீதும் விசாரணை பாய்ந்திருக்கிறது. அமராவதியில் மருந்துக்கடை நடத்தி வந்த உமேஷ் கோலே என்பவர் இந்த ஆண்டு தொடக்கத்தில் குத்திக்கொலை செய்யப்பட்டார்.
நபிகள் நாயகம் தொடர்பாக சோஷியல் மீடியாவில் வந்ததை கோலே பகிர்ந்ததால் அவர் படுகொலை செய்யப்பட்டார் என்று பின்னர் தெரிய வந்தது. இவ்வழக்கு விசாரணையை உத்தவ் தாக்கரே தடுத்து நிறுத்தினார் என்று சட்டமன்றத்தில் ரவி ரானா என்ற உறுப்பினர் தெரிவித்தார். கொள்ளை சம்பவம் காரணமாகவே இக்கொலை சம்பவம் நடந்ததாக கூறி விசாரணையை திசை திருப்பபார்த்ததாகவும் அவர் தெரிவித்தார்.
சட்டமன்றத்தில் மதமாற்றம் தொடர்பாக நடந்த கவன ஈர்ப்பு தீர்மானத்தின் போது ரானா இவ்வாறு தெரிவித்தார். இதற்கு பதிலளித்த அமைச்சர் சம்புராஜ் தேசாய், `இது குறித்து விரிவான விசாரணை நடத்தும்படி மாநில சிறப்பு விசாரணைக்குழுவிடம் கேட்டுக்கொள்ளப்படும். விசாரணை அறிக்கை கிடைத்த பிறகு உள்துறை அமைச்சர் தேவேந்திர பட்னாவிஸுடன் கலந்து ஆலோசித்து இது குறித்து அடுத்த கட்ட நடவடிக்கை எடுக்கப்படும்” என்று தெரிவித்தார். இது குறித்து கருத்து தெரிவித்த உத்தவ் தாக்கரே தலைமையிலான சிவசேனா செய்தித்தொடர்பாளர் ஹர்ஷல் பிரதான், “அரசியல் உள்நோக்கத்தோடு இந்த விசாரணைக்கு உத்தரவிடப்பட்டுள்ளது. இது தாக்கரேயிக்கும், அவரின் குடும்பத்திற்கும் சிக்கலை ஏற்படுத்தும் முயற்சியாகும்.
இவற்றை செய்பவர்கள் தலைமை பொறுப்பில் இருப்பவர்களின் கைப்பொம்மைகள் என்பது அனைவருக்கும் தெரியும்” என்று தெரிவித்தார். தாக்கரே மற்றும் அவரின் குடும்பத்திற்கு எதிராக தற்போது மூன்றாவது வழக்கு விசாரணைக்கு உத்தரவிடப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.