சட்டப்பேரவை எதிர்க்கட்சித் தலைவர் பழனிசாமி நேற்று வெளியிட்ட அறிக்கையில் கூறியிருப்பதாவது: அதிமுக ஆட்சியில் பள்ளிக்கல்வி துறையில் ஏற்கெனவே செயல்படுத்தப்பட்ட சிஎஸ்ஆர் எனப்படும் பெருநிறுவனங்களின் சமூக பங்களிப்பு நிதி திட்டத்துக்கு ‘நம்ம ஸ்கூல்’ என்று பெயர் சூட்டி கடந்த 19-ம் தேதி முதல்வர் ஸ்டாலின் தொடங்கிவைத்துள்ளார்.
கடந்த 2017-ம் ஆண்டு மே மாதம் பள்ளிக்கல்வித் துறைஅமைச்சராக இருந்த கே.ஏ.செங்கோட்டையன், அரசுப் பள்ளிகளின் உள்கட்டமைப்புகளை மேம்படுத்த, தொழிலதிபர்களுடன் ஆலோசனை நடத்தி, இத்திட்டத்தை அறிமுகப்படுத்தினார். அதன்படி, 2019-ம்ஆண்டு ஜூன் முதல் வாரம் வரை சுமார் ரூ.82 கோடி சிஎஸ்ஆர் நிதியாக வரப்பெற்றது.
வெற்றிகரமாக செயல்பட்டு வந்தஇத்திட்டத்தையும், இதற்காக தனியாக தொடங்கப்பட்ட இணையதளத்தையும் திமுக அரசு முடக்கியது. எனினும், தொழிலதிபர்களும் முன்னாள் மாணவர்களும் அரசுப் பள்ளிகளுக்கு நன்கொடை வழங்க தொடர்ந்து பள்ளிக்கல்வித் துறை அதிகாரிகளை அணுகத் தொடங்கியதன் அடிப்படையில், அதிமுக அரசு கொண்டு வந்த இத்திட்டத்தை ‘நம்ம ஸ்கூல்’ என்ற பெயர் வைத்து மீண்டும் முதல்வர் ஸ்டாலின் தொடங்கியுள்ளார்.
எனது ஆட்சிக் காலத்தில் எளிமையாக தொடங்கி வைக்கப்பட்ட இத்திட்டத்தை பெயர் மாற்றி, நட்சத்திர ஓட்டலில் நடத்தப்பட்ட தொடக்க விழாவுக்கு சுமார் ரூ.3 கோடி செலவழிக்கப்பட்டுள்ளது. அரசு நிதிநிலை தள்ளாடிக்கொண்டு இருப்பதாக கூறும் தமிழக அரசு, ரூ.3 கோடியை வீணடித்து இந்த நிகழ்ச்சியை நடத்தியது ஏன்? இவ்வாறு அவர் கூறியுள்ளார்.