புதுடெல்லி: உணவு பாதுகாப்பு சட்டத்தின் கீழ் அடுத்த ஓராண்டுக்கு ரேஷனில் அரிசி, கோதுமை இலவசமாக வழங்க ஒன்றிய அமைச்சரவை கூட்டத்தில் முடிவு எடுக்கப்பட்டுள்ளது. ஒன்றிய அமைச்சரவை கூட்டம் டெல்லியில் நேற்று நடந்தது. இதில், உணவு பாதுகாப்பு சட்டத்தின் கீழ் அடுத்த ஓராண்டுக்கு ரேஷனில் இலவச உணவு தானியங்கள் வழங்க ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ளது. இது குறித்து ஒன்றிய உணவு அமைச்சர் பியூஸ் கோயல் அளித்த பேட்டியில் கூறியதாவது: உணவு பாதுகாப்பு சட்டத்தின் கீழ் தற்போது ரேஷனில் மாதத்திற்கு 5 கிலோ அரிசி மற்றும் கோதுமை வழங்கப்படுகிறது. இதில் ஒரு கிலோ அரிசி ரூ.3 விலையிலும், கோதுமை கிலோ ரூ.2 விலையும் தரப்படுகிறது. இதுதவிர அந்த்யோதயா அன்ன யோஜனா திட்ட பயனாளிகளுக்கு மாதம் 35 கிலோ உணவு தானியங்கள் வழங்கப்படுகின்றன.
இந்நிலையில், அடுத்த ஓராண்டுக்கு ரேஷனில் உணவு தானியங்களை இலவசமாக வழங்க அமைச்சரவையில் முடிவு செய்யப்பட்டுள்ளது. இதற்கு ஆண்டுக்கு ரூ.2 லட்சம் கோடி செலவாகும். இதை ஒன்றிய அரசு முழுமையாக ஏற்கிறது. இது நாட்டின் ஏழைகளுக்கு புத்தாண்டு பரிசாக வழங்கப்படுகிறது. இதன் மூலம், நாடு முழுவதும் 81.35 கோடி ஏழை மக்கள் பயன் அடைவார்கள். அதே சமயம், கொரோனா காலத்தில் தொடங்கப்பட்ட பிரதான் மந்திரி கல்யாண் அன்ன யோஜனா திட்டம் (இலவசமாக உணவு தானியங்கள் வழங்கும் திட்டம்) டிசம்பர் 31க்குப் பின் நீட்டிக்கப்படாது. இவ்வாறு அவர் கூறினார்.