ஒமைக்ரான் வைரஸின் துணை வகைகளான BA 5.2 மற்றும் BF.7 என புதிய வகை வைரஸ் சீனாவில் பரவி வருகிறது. அதிலும், BF.7 வைரஸ் சீனா நகரம் பெய்ஜிங்கில் கடும் பாதிப்புகளை ஏற்படுத்துவதாக தகவல் வெளியாகியுள்ளது. அடுத்த 3 மாதங்களில் சீனாவில் கோவிட் மூன்றாம் அலை ஏற்பட வாய்ப்பு இருப்பதாக ஆய்வாளர்கள் கணிக்கிறார்கள். ஆனால், தற்போதே அங்கு நிலைமை மோசமாக இருப்பதை சமூக வலைதள பதிவுகள் உறுதி செய்கின்றன.
கொரோனா நோய்த் தொற்றால் பாதிக்கப்பட்ட சீன மக்கள் சிகிச்சையில் இருக்கும் வீடியோ சமூக வலைதளங்களில் பரவத் தொடங்கியது. இதைப் பதிவிட்டிருந்த சீனாவைச் சேர்ந்த தொற்றியியல் நிபுணர், “தளர்த்தப்பட்ட கொரோனா விதிமுறைகளால் சீனாவில் நோய் பரவல் அதிகரித்து வருகிறது. லட்சக்கணக்கில் மக்கள் உயிரிழக்கிறார்கள். இது வெறும் தொடக்கம் மட்டும்தான், இன்னும் 90 நாட்களில் 10% உலக மக்களுக்கு தொற்று பரவும்” என எச்சரிக்கை விடுத்தார்.
முதல் மற்றும் இரண்டாம் அலையின் போது பெரும் பாதிப்புகளைச் சந்தித்த சீனா, தொடர்ந்து அதைக் குறைக்கும் நோக்கில் ‘ஜீரோ கோவிட்’ கட்டுப்பாடுகளை விதித்திருந்தது. ஆனால் கடந்த மாதம் சீன மக்கள் இந்தக் கட்டுப்பாடுகளுக்கு எதிராகப் பெரும் போராட்டத்தை முன்னெடுத்தனர். இதனால் அரசு ‘ஜீரோ கோவிட்’ கட்டுப்பாட்டை நீக்கி, தளர்வுகளை அறிவித்தது. அதன் விளைவாக நோய் பரவல் அதிகரித்திருக்கிறது என மருத்துவர்கள் கூறுகின்றனர்.
2019-ம் ஆண்டு கொரோனா பரவிய சீனாவில், 5,242 கோவிட் இறப்புகள் நடந்ததாக அந்த நாடு தரவுகளை வெளியிட்டது. இது மற்ற நாடுகளுடன் ஒப்பிடுகையில் எண்ணிக்கை மிகக் குறைவு. ஆனால், கொரோனா மரணங்களில் சுவாசப் பிரச்னைகளால் இறந்தவர்களை மட்டும் சேர்த்ததாகவும், மற்ற இணை நோய்களால் மரணித்தவர்கள் கொரோனா மரணங்களில் சேர்க்கப்படவில்லை என அரசு விளக்கம் தந்தது. ஆனால், இது முற்றிலும் பாதிப்புகளை மறைக்கும் நடவடிக்கை என உலக நாடுகளால் விமர்சிக்கப்பட்டது.
கடந்த மாதம் சீனாவில் கட்டுப்பாடுகள் தளர்த்திய பின், 140 கோடி மக்கள் தொகையில் 7 பேர் உயிரிழந்துள்ளனர். மேலும் கடந்த வாரங்களில் உயிரிழப்புகள் எதுவும் இல்லை என அரசு தரவுகள் கூறுகிறது. ஆனால், இதற்கு முற்றிலும் எதிராக, கொரோனா மரணத்தால் உயிரிழந்தவர்களை எரியூட்ட முடியாமல் அந்த நாடு திணறுவதாக தகவல் வெளியாகியது.
குறிப்பாக, ஒரு நாளுக்கு 2-4 உடல்கள் மட்டுமே எரியூட்டப்படும் பெய்ஜிங் தகனக் கூடங்களில் தற்போது 50-100 வரை உடல்கள் எரியூட்டப்படுவதாக செய்தி நிறுவனங்கள் கூறுகிறது. அந்தப் பகுதியில் மட்டுமில்லாமல் பல பகுதிகளிலும் தகனக் கூடங்களில் எரியூட்டப்பட வேண்டிய உடல்களால் நிரம்பி வருகிறது. மருத்துவமனைகளிலும் சிகிச்சை அளிக்க இடமில்லை. மருத்துவர்கள், செவிலியர்கள், ஊழியர்கள் என யாருக்கு கொரோனா தொற்று அறிகுறிகள் இருந்தாலும் பரிசோதனை செய்யாமல் பணியில் தொடர சொல்லும் அளவுக்கு நிலைமை மோசமாகியிருக்கிறது என்கிறார்கள். இது அரசின் கையை மீறி போக முக்கிய காரணாமாக அமைந்தது கோவிட் தளர்வுகள் தான் என மருத்துவர்கள் கூறுகின்றனர்.
இதே நிலை தொடர்ந்தால் 2023-ம் ஆண்டுக்கும் 10 லட்சத்திற்கும் அதிகமான மரணம் ஏற்படும் என வாஷிங்டன் சுகாதார மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது, சீனாவின் ஜீரோ கோவிட் தடுப்பு ஒமைக்ரானின் முந்தய திரிபைக் கையாள உதவியது. ஆனால், இது உருமாறி இருக்கும் புதிய வகையைத் தடுக்காது என்றும், அடுத்த ஆண்டு ஏப்ரல் மாதத்திற்கு பிறகும் தொற்றுப் பரவல் இருக்கும் என கணித்துள்ளனர்.
இந்தியா எடுத்திருக்கும் நடவடிக்கை என்ன?
இந்தியாவில் குஜராத் மற்றும் ஒடிசா மாநிலத்தில் புதிய வகை BF.7 ஒமைக்ரான் வைரஸ் தொற்று நான்கு பேருக்கு உறுதி செய்திருப்பதாக அந்த மாநில சுகாதார அமைப்பு தெரிவித்துள்ளது. இந்த நிலையில் தான், மத்திய சுகாதார அமைச்சர் மன்சுக் மண்டாவியா தலைமையில் மருத்துவ அதிகாரிகளுடன் கூட்டம் நடத்தப்பட்டது. அதில் சில கட்டுப்பாடுகள் விதிக்க முடிவெடுத்தனர். அமெரிக்கா, தென் கொரியா, ஜப்பான் நாடுகளில் நோய் பரவல் அதிகரித்திருக்கிறது. இதனால், விமான நிலையங்களில் வந்திறங்கும் வெளிநாட்டுப் பயணிகளைக் கட்டாயம் பரிசோதிக்க வேண்டும் என மத்திய அரசு அறிவுறுத்தியுள்ளது. மக்கள் கூட்டமாகக் கூடும் இடங்களில் முக்கவசம் கட்டாயமாக்கப்பட்டுள்ளது .
நோய் பரவலைத் தடுக்க, மாநிலத்தில் கண்டறியப்படும் தொற்று புது வகை வைரஸ்தானா என்பதைக் கண்டறிய மரபணு பரிசோதனை உட்படுத்த மத்திய அரசு கூறியுள்ளது. அதனைத் தொடர்ந்து கொரோனா தடுப்புப் பணிகளைத் தீவிரப்படுத்த டெல்லியில் பிரதமர் தலைமையில் உயர்நிலைக்குழுவுடன் ஆலோசனை நடத்தப்பட்டது. ஏற்கனவே, இரண்டாம் அலையின்போது அரசு நோய் பரவலைக் கையாண்ட விதம் விமர்சனத்துக்குள்ளாகியது. எனவே, அதைத் தடுக்க முன்னெச்சரிக்கை நடவடிக்கையை எடுக்க தொடங்கியிருக்கிறது.