தமிழகத்தில் கொரோனா பரவல் அதிகரித்ததன் காரணமாக கடந்த 2020 மார்ச் மாதம் முதல் தமிழக முழுவதும் உள்ள அரசு மருத்துவமனைகளில் தனிமைப்படுத்தும் மையங்கள் மற்றும் சிறப்பு சிகிச்சை வார்டுகள் அமைக்கப்பட்டன. இதனைத் தொடர்ந்து ஆக்ஸிஜன் வசதியும் செய்யப்பட்டது. மத்திய அரசின் நிதி உதவியுடன் அரசு மருத்துவமனைகளில் ஆக்ஸிஜன் உற்பத்தி செய்வதற்கான மையங்கள் அமைக்கப்பட்டன.
அதே போன்று மத்திய அரசின் பங்களிப்புடன் 2500 க்கும் மேற்பட்ட அதிநவீன படுக்கை வசதிகளும், பத்தாயிரத்திற்கும் மேற்பட்ட தனிமைப்படுத்தப்பட்ட படுக்கை வசதிகளும் நிறுவப்பட்டன. தமிழகத்தில் படிப்படியாக கொரோனா பரவால் குறைந்த நிலையில் அவை மற்ற சிகிச்சைகளுக்காக பயன்படுத்தப்பட்டன. ஒரு சில மருத்துவமனைகளில் கொரோனா வார்டு முற்றிலும் மூடப்பட்டது.
இந்த நிலையில் சீனாவில் கொரோனா பரவல் மீண்டும் அதிகரிக்க துவங்கியுள்ளதால் நாட்டில் உள்ள அனைத்து மாநிலங்களும் முன்னெச்சரிக்கை நடவடிக்கை மேற்கொள்ள மத்திய அரசு உத்தரவிட்டிருந்தது. இந்த நிலையில் நேற்று முன்தினம் தமிழக முதல்வர் மு.க ஸ்டாலின் தலைமையில் நடைபெற்ற ஆலோசனை கூட்டத்திற்கு பிறகு தமிழக அரசு மருத்துவமனைகளில் உள்ள கொரோனா வார்டுகளை பராமரிக்க சுகாதாரத்துறை உத்தரவிட்டுள்ளது. அதேபோன்று மாற்று சிகிச்சையாக பயன்படுத்தப்படும் கொரோனா வார்டுகள் தயார் நிலையில் வைத்திருக்க தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது.