நாகையில் பொதுமக்களுக்கும், வாகன ஓட்டிகளுக்கும் இடையூறு ஏற்படுத்தும் வகையில், சாலையில் சுற்றித் திரிந்த 38 மாடுகளை நகராட்சி பணியாளர்கள் பிடித்து அடைத்தனர். மேலும் மூன்றாயிரம் ரூபாய் அபராதம் வசூலித்தப் பிறகு பிடிப்பட்ட மாடுகள் உரிமையாளர்களிடம் ஒப்படைக்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
நாகை மாவட்டத்தில் பல்வேறு பகுதிகளில் பொதுமக்களுக்கும், வாகன ஓட்டிகளுக்கும் இடையூறு ஏற்படுத்தும் வகையில் சாலைகளில் மாடுகள் சுற்றித் திரிவதாக தொடர்ந்து குற்றச்சாட்டு எழுந்தது. மாடுகள் சுற்றித் திரிவதால் அடிக்கடி விபத்து ஏற்படுவதால், மாடுகளை அப்புறப்படுத்த வேண்டும் என மாவட்ட ஆட்சியருக்கு தொடர்ந்து பொதுமக்களிடமிருந்து புகார் வந்தது.
இதனை அடுத்து சாலைகளில் சுற்றித் திரியும் கால்நடைகளை பிடிக்க நகராட்சி துறைக்கு ஆட்சியர் அருண் தம்புராஜ் உத்தரவிட்டார். உரிமையாளர்கள் மாட்டை ஓட்டி செல்லாமல் இரவிலும் சுற்றி திரிந்ததால் அங்கு சென்ற நகராட்சி ஊழியர்கள், நாகையில் 32 மாடுகளையும், நாகூர் பகுதியில் 6 மாடுகள் என 38 மாடுகளை பிடித்து பாதுகாப்பாக அந்தந்த பகுதியில் அடைத்து வைத்துள்ளனர். அலட்சியமாக சாலையில் மாடுகளை திரியவிட்ட உரிமையாளர்கள் மூவாயிரம் ரூபாய் அபராதம் செலுத்தியப் பிறகு மாடுகளை ஒப்படைக்க நகராட்சி ஆணையர் ஸ்ரீதேவி உத்தரவிட்டுள்ளார்.Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM