புதுடெல்லி: நாடாளுமன்றத்தில் 16முக்கிய பிரச்னைகள் முன்வைக்கப்பட்டபோதிலும், ஒன்றிய அரசு ஒரு பிரச்னை பற்றிகூட விவாதம் நடத்துவதற்கு அனுமதிக்கவில்லை என்று காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜூன கார்கே தெரிவித்துள்ளார். டெல்லியில் காங்கிரஸ் கட்சியின் உயர்மட்ட தலைவர்கள் பங்கேற்ற கூட்டம் நேற்று நடைபெற்றது. கட்சியின் தலைவர் மல்லிகார்ஜூன கார்கே தலைமையில் நடந்த இந்த கூட்டத்தில் கட்சி அமைப்புக்களை வலுப்படுத்துவது மற்றும் ஒற்றுமை பயணத்துக்கு பின் மேற்கொள்ளப்பட வேண்டிய நடவடிக்கைள் குறித்து ஆலோசிக்கப்பட்டது.
இதனை தொடர்ந்து செய்தியாளர்களை சந்தித்த காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜூன கார்கே கூறுகையில், ‘‘ஒன்றிய அரசு விவாதங்களை கண்டு ஓடுகின்றது. குளிர்கால கூட்டத்தொடரில் எதிர்கட்சிகள் 16 முக்கிய பிரச்னைகளை முன்வைத்தன. ஆனால் பிரதமர் மோடி அரசானது ஒரு பிரச்னை குறித்து கூட விவாதம் நடத்த அனுமதிக்கவில்லை. ஏதாவது ஒரு காரணத்தை கூறி அரசு விவாதத்தில் பங்கேற்காமல் ஓடிக்கொண்டே இருந்தது. சீனாவின் அத்துமீறல்கள் குறித்த கேள்வியோ, இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பு வழங்குவது, பணவீக்கம் அதிகரிப்பு அல்லது மக்கள் தொடர்பான வேறு எந்த முக்கிய பிரச்னையாக இருந்தாலும் எதற்கும் ஒன்றிய அரசால் பதிலளிக்க முடியவில்லை”என்றார்.