உக்ரைன் மீது ரஷ்யா போர் தொடுத்து 300 நாள்களைக் கடந்திருக்கும் நேரத்தில், இந்தப் போரில் உக்ரைன், ரஷ்யா மட்டுமல்லாமல், உலக நாடுகள் பலவும் கடுமையாக பாதிக்கப்பட்டிருக்கின்றன. போரை நிறுத்த பலகட்ட முயற்சிகள் நடைபெற்றன. அதோடு பல்வேறு உலக நாடுகள் போரை முடிவுக்குக் கொண்டுவர வேண்டும் என வலியுறுத்திவந்தன. இந்த நிலையில், ரஷ்ய செய்தியாளர்களிடம் ரஷ்ய அதிபர் விளாடிமிர் புதின், “ரஷ்யாவை பலவீனப்படுத்த அமெரிக்கா உக்ரைனை ஒரு போர்க்களமாகப் பயன்படுத்துகிறது. எங்கள் இலக்கு… இந்த மோதலை முடிவுக்குக் கொண்டுவர வேண்டும் என்பதுதான். ரஷ்யா பேச்சுவார்த்தைக்கு தயாராக இருக்கிறது” எனத் தெரிவித்திருந்தார்.
ஆனால், உக்ரைன் பேச்சுவார்த்தையை நிராகரித்ததாகக் கூறப்படுகிறது. இந்த நிலையில், ரஷ்ய வெளியுறவு அமைச்சர் செர்ஜி லாவ்ரோவ், “உக்ரைனுக்கு எங்களின் கோரிக்கை\ முன்மொழிவுகள் நன்கு தெரியும். அவற்றை நிறைவேற்றுவது உக்ரைனிய அதிகாரிகளின் கையில் உள்ளது.
இல்லையெனில் ரஷ்ய ராணுவம் இந்த பிரச்னையை தீர்மானிக்கும். எனவே, உங்கள் சொந்த நலனுக்காக அவற்றை நிறைவேற்றுங்கள். இல்லையெனில், பிரச்னை ரஷ்ய ராணுவத்தால் தீர்மானிக்கப்படும்.” எனத் தெரிவித்திருக்கிறார்.
கடந்த செப்டம்பரில், ரஷ்யா உக்ரைனின் நான்கு மாகாணங்களான – டோனெட்ஸ்க், லுஹான்ஸ்க், ஜபோரிஜியா மற்றும் கெர்சன் ஆகியவற்றை இணைத்துக் கொண்டது. அதற்காக வாக்கெடுப்புகளையும் நடத்தியது. ஆனால், அதை உக்ரைன் நிராகரித்து. மேலும், அந்த வாக்கெடுப்பு சட்டவிரோதமானது எனத் தெரிவித்திருந்தது குறிப்பிடதக்கது.