பாஜக தேசிய தலைவர் ஜே.பி நட்டா இன்று கோவை வந்துள்ளார். பாஜக பூத் கமிட்டி நிர்வாகிகள், ஐ.டி விங் நிர்வாகிகள் என்று பல்வேறு தரப்பினருடன் ஆலோசனைக் கூட்டத்தில் ஈடுபட உள்ளார். மாலை காரமடை பகுதியில் கோவை மற்றும் நீலகிரி நாடாளுமன்ற தொகுதிகளை மையப்படுத்தி பொதுக் கூட்டம் நடைபெற உள்ளது.
முன்னதாக நட்டா, கோவையில் கார்வெடிப்பு சம்பவம் நடந்த கோட்டை ஈஸ்வரன் கோயிலுக்கு வருவதாக இருந்தது.
பனிமூட்டம் காரணமாக டெல்லியில் இருந்து விமானம் தாமதமாகத்தான் புறப்பட்டது. இதனால் மத்திய இணை அமைச்சர் எல்.முருகன், மகளிரணி தேசிய தலைவர் வானதி சீனிவாசன் எம்.எல்.ஏ, பாஜக சட்டமன்ற குழு தலைவர் நயினார் நாகேந்திரன், மாநிலத் தலைவர் அண்ணாமலை, ஹெச்.ராஜா ஆகியோர் கோட்டை ஈஸ்வரன் கோயிலில் தரிசனம் செய்தனர்.
பிறகு செய்தியாளர்களை சந்தித்த அண்ணாமலை, “தேசிய தலைவர் ஜே.பி. நட்டா நாடு முழுவதும் உள்ள நாடாளுமன்ற தொகுதிகளுக்கு பயணம் செய்து வருகிறார்.
அந்த வகையில் தமிழ்நாட்டில் கோவை, நீலகிரியில் இருந்து அவரின் பயணம் தொடங்குகிறது. பாஜக-வுக்கு ஏற்கெனவே கோவையில் திறமையான எம்.எல்.ஏ இருக்கிறார். முருகன் ஜியும் நீலகிரி நாடாளுமன்ற தொகுதியில் கவனம் செலுத்தி வருகிறார்.
மக்களின் அடிப்படை குறைகளை பெரும் அளவு தீர்த்து வருகிறார். எனவே தேசிய தலைவரின் பயணம் பாஜக-வுக்கு இங்கு மிகப்பெரிய எழுச்சியை கொடுக்கும்.” என்றார்.
ஏற்கெனவே 2024 நாடாளுமன்ற தேர்தலில் நீலகிரியில் திமுகவின் ஆ.ராசாவுக்கு எதிராக பாஜக சார்பில் எல்.முருகன் போட்டியிடுவார் என்ற தகவல் வெளியானது. முருகன் 2019 நாடாளுமன்ற தேர்தலின்போதே நீலகிரியில் கவனம் செலுத்தத் தொடங்கினார்.
மத்திய இணை அமைச்சரானதும் நீலகிரி மீது கூடுதல் கவனம் செலுத்தி வருகிறார். தற்போது அண்ணாமலை கருத்து மூலம் முருகன் நீலகிரி தொகுதியில் போட்டியிடுவது உறுதியாகியுள்ளது என்கிறார்கள் அரசியல் பார்வையாளர்கள்.