அண்ணாமலை தலைமையில் பெண்கள் படும் பாடு – போர்க்கொடி தூக்கும் காய்த்ரி ரகுராம்

தமிழ்நாடு பாஜகவில் கடந்த சில மாதங்களாகவே சலசலப்புக்கு பஞ்சமில்லை. திருச்சி சூர்யா சிவா – டெய்சி மோதலில் ஆரம்பித்த இந்த விவகாரம் தற்போது அலிஷா அப்துல்லாவரை வந்து நிற்கிறது. இதற்கிடையே கட்சி கட்டுப்பாட்டை மீறியதாக கூறி தமிழ்நாடு பாஜகவின் வெளிநாட்டு மற்றும் அண்டை மாநில தமிழ் வளர்ச்சி பிரிவின் தலைவராக இருந்த காயத்ரி ரகுராம் கட்சியிலிருந்து அதிரடியாக நீக்கப்பட்டார். தான் நீக்கப்பட்டாலும் நாட்டுக்காக தொடர்ந்து உழைப்பேன். அதை யாராலும் தடுக்க முடியாது என காயத்ரி சூளுரைத்தார்.

இதனையடுத்து தமிழ்நாடு பாஜக மீதும், மாநில தலைவர் அண்ணாமலை மீதும் பல்வேறு குற்றச்சாட்டுக்களை முன்வைத்து வந்தார். அண்ணாமலையின் தலைமை சரியில்லை. குறிப்பிட்ட சமூகத்தினரை ஓரங்கட்டுகிறர் என பகிரங்கமாகவே பல இடங்களில் அவர் பேசிவருகிறார். இதனால் அண்ணாமலையின் இமேஜுக்கு டேமேஜ் ஆகும் சூழ்நிலை உருவாகியிருக்கிறது.

மேலும் தொடர்ந்து சர்ச்சைகள் நீடிப்பதால் தனக்கு சில மாதங்கள் லீவ் வேண்டும் என அண்ணாமலை டெல்லி பாஜகவிடம் கோரிக்கை வைத்ததாகவும் தகவல் வெளியாகி அவர் கேலிக்கும், கிண்டலுக்கும் ஆளானார். 

இந்நிலையில் காயத்ரி ரகுராம் இன்று பதிவு செய்திருக்கும் ட்வீட் மேலும் பரபரப்பை கூட்டியுள்ளது. அவர் தனது ட்விட்டர் பக்கத்தில், “அண்ணாமலை தலைமையின் கீழ் பாஜக தகவல் தொழில்நுட்ப பிரிவினரிடமிருந்து மிகவும் மோசமான தனிப்பட்ட தாக்குதல்களை பெண்கள் சந்திக்கின்றனர். இந்த விவகாரம் தொடர்பாக தமிழ்நாடு காவல் துறை விசாரிக்க வேண்டும்.

அவரும், அவருடன் இருப்பவர்களும் இந்து தர்மத்தை பின்பற்றுவதில்லை. சபரிமலைக்கு மாலை அணிந்துகொண்டு என்னைப் பற்றி தவறான வதந்திகளையும், கிசுகிசுக்களையும் உருவாக்குகிறார். பழிவாங்கும் வார்த்தைகளால் எனக்கு கெட்ட பெயரை உருவாக்க அண்ணாமலை செயல்பட்டுக்கொண்டிருக்கிறார்” என குறிப்பிட்டுள்ளார்.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.