தமிழக அரசு பள்ளிகளில் கடந்த 2009 ஆம் ஆண்டு ஜூன் மாதம் வரை நியமிக்கப்பட்ட இடைநிலை ஆசிரியர்களுக்கு ஒரு ஊதியமும் அதன் பிறகு நியமிக்கப்பட்ட அனைத்து இடைநிலை ஆசிரியர்களுக்கும் ஒரு ஊதியவும் நிர்ணயம் செய்து தமிழக அரசு அரசாணை வெளியிட்டது. இந்த ஊதிய ஏற்றத்தாழ்வுகளை முறையாக சரி செய்து சம வேலை சம ஊதியம் கோரி இடைநிலை ஆசிரியர்கள் நீண்ட நாட்களாக தமிழக அரசிடம் கோரிக்கை வைத்து வருகின்றனர்.
இந்த நிலையில் கடந்த 27 ஆம் தேதி முதல் 2000க்கும் மேற்பட்ட இடைநிலை ஆசிரியர்கள் குடும்பத்துடன் சென்னை நுங்கம்பாக்கத்தில் உள்ள பள்ளிக்கல்வித்துறை வளாகத்தில் தொடர் உண்ணாவிரத போராட்டம் நடத்தி வருகின்றனர். மூன்றாவது நாளை எட்டிய இடைநிலை ஆசிரியர்களின் தொடர் உண்ணாவிரத போராட்டத்தால் இன்று 40க்கும் மேற்பட்டோர் மயக்கம் அடைந்த நிலையில் சென்னையில் உள்ள கீழ்பாக்கம் மற்றும் ராயப்பேட்டை அரசு மருத்துவமனைகளில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டனர்.
இதனிடையே தமிழக அரசு சார்பில் போராட்டம் நடத்தி வரும் இடைநிலை ஆசிரியர் பிரதிநிதிகளுடன் பள்ளி கல்வித்துறை செயலாளர் பேச்சுவார்த்தை நடத்தினார். இந்த பேச்சுவார்த்தையில் இடைநிலை ஆசிரியர்களின் கோரிக்கைகளை தமிழக அரசு ஏற்காததால் பேச்சுவார்த்தை தோல்வியில் முடிவடைந்தது. இது காரணமாக தொடர் உண்ணாவிரத போராட்டம் தொடர்ந்து நடைபெறும் என இடைநிலை ஆசிரியர்களின் பிரதிநிதிகள் அறிவித்துள்ளனர். இதனால் தமிழக அரசு இடைநிலை ஆசிரியர்கள் விவகாரத்தில் நெருக்கடியை சந்தித்துள்ளது.