சமீப காலமாகவே இளைஞர்களும் காதலர்களும் ஒருவருக்கொருவர் வித்தியாசமான பரிசுகளை வழங்க வேண்டும் என்ற தேடலில் பல மாடர்ன் கலைகள் இங்குப் பிரபலமாகி வருகின்றன. அப்படிப் பிரபலமானதுதான் இந்த ‘Blood Art’. அதாவது, ஒருவரின் ரத்தத்தைச் சிறிய சிரஞ்ச் மூலம் எடுத்து அதை வைத்து அவர் பரிசு கொடுக்க விரும்புபவரின் ஓவியத்தை வரைவது. சென்னையில் சிலர் இதை MSMEல் பதிவு செய்து சிறு தொழிலாகவே செய்து வந்ததாகவும் கூறப்படுகிறது.
பல இளைஞர்களும் இதனால் ஏற்படக்கூடிய அபாயங்களை அறியாமல் ரத்தத்தைக் கொடுத்து ஓவியங்களை வாங்கியுள்ளனர். சுகாதாரமற்ற முறையில், ஒரே ஊசியைப் பயன்படுத்தினால் உயிருக்கே ஆபத்தாகும் இந்த விபரீத கலையைத் தடுக்குமாறு குற்றச்சாட்டுகள் எழுந்தன. தி.நகர், வடபழனி போன்ற முக்கியமான இடங்களில் இந்த வியாபாரம் சூடு பிடிக்க, அரசின் கவனத்திற்கு இது சென்றது.
தமிழக சுகாதாரத்துறை அமைச்சர் மா. சுப்பிரமணியன், “ரத்தத்தைக் கொண்டு ஓவியம் வரைவதை நிறுத்திக் கொள்ளுங்கள். தி.நகர், வடபழனியில் பிளட் ஆர்ட் நடத்தி வந்தவர்களிடமிருந்து அவர்கள் பயன்படுத்திய ஊசி மற்றும் ஓவியங்களைக் கைப்பற்றி எச்சரித்து இருக்கிறோம். இனி ரத்தத்தை எடுத்து ஓவியம் வரைவது தண்டனைக்குரிய குற்றமாகும். விலைமதிப்பில்லாத ரத்தத்தை இதுபோல வீணாக்க வேண்டாம். பதிலாக, உயிர் காக்கும் ரத்தத்தை தானம் செய்யுங்கள்” என்று செய்தியாளர்கள் சந்திப்பில் தெரிவித்தார்.
சில மாதங்களுக்கு முன் பாலிவுட் திரைப்பட நடிகர் சோனு சூட், ரசிகர் ஒருவர் தன்னுடைய ஓவியத்தை ரத்தத்தில் வரைந்து எடுத்து வந்ததைப் பார்த்து அதிர்ச்சியானார். ரசிகரின் அன்புக்கு நன்றி தெரிவித்த அவர், இது போல ரத்தத்தை வீணாக்காமல் ரத்த தானம் செய்யுங்கள் என்று கண்டிப்புடன் அறிவுரை வழங்கி அனுப்பி வைத்தார்.
கர்நாடகாவைச் சேர்ந்த சங்கமேஷ் பாகலி என்பவர், தன்னுடைய சொந்த ரத்தத்தில், மகாத்மா காந்தி, பகத் சிங், சந்திரசேகர் ஆசாத், சுவாமி விவேகானந்தர், பி.ஆர். அம்பேத்கர் உட்பட 200 தலைவர்கள் மற்றும் பிரபலங்களின் ஓவியங்களை வரைந்து 2016ல் இந்தியச் சாதனை புத்தகத்தில் இடம்பிடித்தார் என்பது குறிப்பிடத்தக்கது.