பெங்களூரு: கர்நாடகாவில் உள்ள 865 கிராமங்களை மகாராஷ்டிராவுடன் இணைப்பது தொடர்பாக மகாராஷ்டிரா சட்டப்பேரவையில் தீர்மானம் நிறைவேற்றியதற்கு கர்நாடக அரசு கடும் கண்டனம் தெரிவித்துள்ளது.
1956-ஆம் ஆண்டு மொழிவாரி மாநிலங்கள் பிரிக்கப்பட்டதில் இருந்து கர்நாடகா – மகாராஷ்டிரா இடையே எல்லைப் பிரச்சினை நீடிக்கிறது. கர்நாடகாவில் உள்ள பெலகாவி, பீதர், கார்வார் உள்ளிட்ட எல்லையோர மாவட்டங்களில் உள்ள 865 கிராமங்களை மகாராஷ்டிராவுடன் இணைக்க வேண்டும் என மராத்திய அமைப்பினர் தொடர் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். இது தொடர்பாக மகாராஷ்டிர அரசு கடந்த மாதம் உச்ச நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தது.
இதனால், இரு மாநிலங்களிலும் போராட்டம் வெடித்ததால் மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா இரு மாநில முதல்வர்களையும் அழைத்து பேச்சுவார்த்தை நடத்தினார். உச்ச நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ள வழக்கில் தீர்ப்பு வெளியாகும் வரை இரு மாநிலங்களும் அமைதி காக்க வேண்டும் என வலியுறுத்தினார்.
இந்நிலையில், கர்நாடக சட்டப்பேரவையில், ‘மகாராஷ்டிராவுக்கு ஒரு அங்குலம் நிலத்தைக்கூட விட்டுக் கொடுக்க முடியாது’ என கடந்த வாரம் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. இதற்கு பதிலடியாக மகாராஷ்டிர அரசு அம்மாநில சட்டப்பேரவையில், ”கர்நாடகாவில் மராத்தியர்கள் வாழும் 865 கிராமங்களையும் மகாராஷ்டிராவுடன் இணைக்க வேண்டும்” என தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. இரு மாநில அரசுகளின் சட்டப்பேரவை தீர்மானங்களால் எல்லைப் பிரச்சினை மீண்டும் வெடித்துள்ளது.
இதுகுறித்து கர்நாடக முதல்வர் பசவராஜ் பொம்மை கூறுகையில், ”மகாராஷ்டிர அரசின் தீர்மானம் நாட்டின் கூட்டாட்சி முறைக்கு எதிரானது. அதனை வன்மையாக கண்டிக்கிறேன். கர்நாடகாவின் நிலம், நீர், மொழி உரிமை விவகாரத்தில் எந்தவித சமரசத்தையும் ஏற்க மாட்டோம். இந்த விவகாரத்தில் பேச்சுவார்த்தைக்கு இடமே இல்லை.
கர்நாடகாவில் உள்ள 865 கிராமங்களையும் இணைத்து தனி யூனியன் பிரதேசமாக அறிவிக்க வேண்டும் என சிவசேனா தலைவர் உத்தவ் தாக்கரே பேசி இருக்கிறார். இந்திய கூட்டாட்சி தத்துவத்துக்கு எதிராக செயல்படும் மகாராஷ்டிர அரசு மற்றும் அமைப்புகளின் மீது மத்திய அரசு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்” என்றார்.