திருச்சி மாவட்டத்துக்கு இன்று வருகை தந்த தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், அண்ணா விளையாட்டரங்கில் நடைபெற்ற நிகழ்ச்சியில் சுமார் 1,000 கோடி ரூபாய் மதிப்பிலான புதிய திட்டங்களுக்கு அடிக்கல் நாட்டியும், முடிவுற்ற திட்டப் பணிகளை தொடங்கி வைத்தும், பொதுமக்களுக்கு நலத்திட்ட உதவிகளையும் வழங்கினார். மாவட்டம் வாரியாக நடைபெறும் இந்த நிகழ்வில் முதன்முறையாக முதலமைச்சர் மு.க.ஸ்டாலினுடன், சமீபத்தில் அமைச்சராகப் பொறுப்பேற்ற உதயநிதி ஸ்டாலினும் கலந்துகொண்டார்.
நிகழ்ச்சியில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பேசுகையில், “திருச்சியில் எது நடந்தாலும் பிரமாண்டமாகத்தான் இருக்கும் என்பதை கே.என்.நேரு இன்னொருமுறை நிகழ்த்திக் காட்டியிருக்கிறார். தமிழ்நாட்டில் தொழில் துறை என்பது மிக வேகமாக முன்னேற்றத்தை நோக்கி போய்க் கொண்டிருக்கிறது. இந்தியாவில் மற்ற மாநிலங்களிலிருந்து மட்டுமல்ல, உலக நிறுவனங்களும் தமிழகத்தை நோக்கி புதிய தொழிற்சாலைகள் கொண்டு வரத் தொடங்கியுள்ளன. இந்த மேடைக்கு புதியவராக, அமைச்சரவைக்கு புதியவராக தம்பி உதயநிதி வருகை தந்துள்ளார். அமைச்சரவைக்குத்தான் அவர் புதியவரே தவிர, உங்களுக்கு நன்கு அறிமுகமானவர், உங்களுக்கு பழகிய முகம் தான். அவர் அமைச்சராக பொறுப்பேற்றபோது விமர்சனங்கள் வந்தன, வரத்தான்செய்யும். இப்படி விமர்சனங்கள் வந்தபோது `என்னுடைய செயல்பாட்டைப் பாருங்கள், அதன்பிறகு விமர்சியுங்கள்’ என்றார். அவர் சட்டமன்ற உறுப்பினராக பொறுப்பேற்ற போதும் விமர்சனங்கள் வந்தன. ஆனால், அதற்கெல்லாம் தன்னுடைய செயல்பாடுகளால், பதில் சொல்லி அனைவரது பாராட்டுகளையும் பெற்றார். தன்னை நிரூபித்துக் காட்டினார்” என்றார்.
தொடர்ந்து பேசியவர், “தற்போது உதயநிதிக்கு ஏராளமான பொறுப்புகள் இருக்கு. இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு, மகளிர் மேம்பாடு, சிறப்புத் திட்ட செயலாக்கம், வறுமை ஒழிப்பு, கிராமப்புற கடன்கள் என முக்கியமான துறைகள் வழங்கப்பட்டிருக்கின்றன. இவையனைத்தும் தமிழ்நாட்டில் ஏழை, எளிய விளிம்புநிலை மக்களை மேம்படுத்தக் கூடிய துறைகள். இவைதான் உதயநிதியிடம் ஒப்படைக்கப்பட்டிருக்கின்றன. அமைச்சர் பொறுப்பிலே சிறப்பாகப் பணியாற்றி, இந்தத் துறைகளை மேம்படுத்துவார் என்ற நம்பிக்கை எனக்கு அதிகமாக இருக்கிறது. மேம்படுத்த வேண்டும் என்பதை முதலமைச்சராக நம்பிக்கையுடன் எதிர்பார்க்கிறேன்” என்றார்.