மதுரை: ‘பிஎஸ்சி சமூக சுகாதாரம் படித்தவர்களை மருத்துவர்களாக பதிவு செய்ய முடியாது’ என உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
மதுரையை சேர்ந்த வி.பாலு, வி.மனோகரன், கே.மலைச்சாமி ஆகியோர் உயர் நீதிமன்ற கிளையில் தாக்கல் செய்த மனு: “நாங்கள் அரசால் அங்கீகரிக்கப்பட்ட பிஎஸ்சி (சமூக சுகாதாரம்) படிப்பு முடித்துள்ளோம். எங்களை மருத்துவர்களாக பதிவு செய்யுமாறு தமிழ்நாடு மருத்துவ கவுன்சிலுக்கு விண்ணப்பித்தோம். எங்கள் விண்ணப்பத்தை நிராகரித்து மருத்துவ கவுன்சில் 14.5.2019-ல் உத்தரவிட்டது. அந்த உத்தரவை ரத்து செய்து எங்களை பதிவு பெற்ற மருத்துவர்களாக பதிவு செய்ய தமிழ்நாடு மருத்துவ கவுன்சிலுக்கு உத்தரவிட வேண்டும்”. இவ்வாறு மனுவில் கூறப்பட்டிருந்தது.
இந்த மனுவை நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் விசாரித்தார். மருத்துவ கவுன்சில் தரப்பில், ‘எம்பிபிஎஸ் படித்தவர்களை மட்டுமே மருத்துவர்களாக பதிவு செய்ய முடியும். மனுதாரர்களை மருத்துவர்களாக பதிவு செய்ய முடியாது’ எனத் தெரிவிக்கப்பட்டது.
இதையடுத்து நீதிபதி, மனுதாரர் தங்களை எம்பிபிஎஸ் படித்தவர்கள் போல் மருத்துவராக பதிவு செய்யக்கோருவது தகுதிமீறிய செயலாகும். இதனால் மனுதாரரின் கோரிக்கையை ஏற்க முடியாது. மனு தள்ளுபடி செய்யப்படுகிறது என உத்தரவிட்டார்.