வேலூர்: வேலூர் எஸ்பி குடியிருப்பு வளாகம் வேலூர் வேலப்பாடியில் உள்ளது. இங்கு எஸ்பி ராஜேஷ்கண்ணன் தனது குடும்பத்தினருடன் வசித்து வருகிறார். நேற்று மாலை குடியிருப்பு வளாகத்துக்குள் சாரை பாம்பு ஒன்று புகுந்தது. இதைக்கண்ட அங்கு பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்த காவலர்கள் அதிர்ச்சி அடைந்தனர். உடனடியாக அதனை பிடிக்க முயன்றனர். ஆனால் பாம்பு வளாகத்தில் உள்ள தோட்டப்பகுதிக்குள் சென்றதால் அவர்களால் பிடிக்க முடியவில்லை.
இதுகுறித்து வேலூர் தீயணைப்புத்துறையினருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. அதன்பேரில் நிலைய அலுவலர் (பொறுப்பு) தணிகைவேல் தலைமையிலான வீரர்கள் விரைந்து வந்தனர். குடியிருப்பில் இருந்த எஸ்பி ராஜேஷ்கண்ணனும் தீயணைப்பு வீரர்களுடன் சேர்ந்து பாம்பை தேடும் பணியில் ஈடுபட்டார். அப்போது அங்கு பதுங்கி இருந்த 5 அடி நீளமுள்ள சாரை பாம்பை தீயணைப்பு வீரர்கள் லாவகமாக பிடித்தனர். பின்னர் அதனை வேலூர் வனத்துறையினரிடம் ஒப்படைத்தனர்.