திருச்சி மாவட்டத்திற்கு இன்று வருகை தந்த தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், சுமார் 1,000 கோடி ரூபாய் மதிப்பிலான புதிய திட்டங்களுக்கு அடிக்கல் நாட்டியும், முடிவுற்ற திட்டப் பணிகளை தொடங்கி வைத்தும், பொதுமக்களுக்கு நலத்திட்ட உதவிகளையும் வழங்கினார். திருச்சி அண்ணா விளையாட்டரங்கில் நடைபெற்ற இந்த நிகழ்ச்சியை அமைச்சர் கே.என்.நேரு பிரமாண்டமாக ஏற்பாடு செய்திருந்தார்.
நிகழ்ச்சியின்போது அமைச்சர் கே.என்.நேரு பேசுகையில், “தலைவர் கலைஞர் அவர்கள் 1996-லிருந்து 2001 வரை முதலமைச்சராக இருந்தபோது 50 முறை திருச்சிக்கு வந்திருக்கிறார்கள். இளைஞரணிச் செயலாளராக, உள்ளாட்சித் துறை அமைச்சராக, துணை முதலமைச்சராக, முதலமைச்சராக என முதலமைச்சரும் (ஸ்டாலின்) எண்ணற்ற முறை திருச்சிக்கு வருகைதந்து பல திட்டங்களைத் தொடங்கி வைத்துள்ளார்கள். தலைவர் (ஸ்டாலின்) உள்ளாட்சித் துறை அமைச்சராக இருந்தபோது, முதலமைச்சரின் வீடு கட்டும் திட்டத்தை இதே அரங்கிலேதான் கலைஞர் அதை தொடங்கி வைத்தார்கள். தலைவர் உள்ளாட்சித் துறை அமைச்சராக இருந்தபோது மகளிர் சுய உதவிக் குழுக்களுக்கு 4-5 மணி நேரம் நின்றபடி ‘அனைத்து மகளிருக்கும் நேரடியாக நானே தருவேன்’ என நிதியை வழங்கி முதலிலே ஆரம்பித்தது திருச்சியில்தான். இன்றைக்கு உதயநிதி அவர்கள் அமைச்சராகப் பொறுப்பேற்று மகளிர் சுய உதவிக் குழுக்களுக்கு நிதி வழங்கியுள்ளார். திருச்சியில் ஆரம்பித்தது எதுவும் வீண் போனதல்ல. உதயநிதி அவர்களே நீங்கள் சிறப்பான இடத்திற்கு வருவீர்கள் என நான் வாழ்த்துகிறேன். பேரரசர் போல தளபதியும் (ஸ்டாலின்), சிற்றரசர் போல உதயநிதியும் இன்றைக்கு திருச்சிக்கு வந்திருக்கிறீர்கள்” என்றார்.
தொடர்ந்து பேசியவர், “இந்த ஒன்றரை ஆண்டுகளில் மட்டும் திருச்சிக்கு புதிய பேருந்து நிலையம், மலைவாழ் மக்களுக்கு புதுப்பிக்கப்பட்ட சாலை வசதி, அறநிலையத்துறையில் பல கோவில்களுக்கு மேம்பாட்டு பணி, எண்ணற்ற மேம்பாலங்கள், சாலை விரிவாக்கம், கூட்டுக் குடிநீர்த் திட்டங்கள், மருத்துவமனைகள் என எண்ணற்ற திட்டங்களை முதலமைச்சர் கொடுத்திருக்கிறார்கள். திருச்சியைப் பொறுத்தவரை நாங்கள் நினைத்ததையெல்லாம் எங்களுக்கு நீங்கள் செய்து கொடுத்திருக்கிறீர்கள். இந்த திருச்சி ஒரு மிகப்பெரிய முக்கிய நகரம். அதிலும் குறிப்பாக முழுக்க முழுக்க இந்த மக்கள் உங்களை ஏற்றுக் கொண்டிருக்கிறார்கள். எந்தத் தேர்தல் வந்தாலும் சரி, எந்த நிலை வந்தாலும் சரி, உங்கள் முன்னால் உங்கள் பின்னால் இந்த திருச்சி மாவட்ட மக்கள் நிற்பார்கள். என்றைக்கும் உங்களுக்கு வெற்றி ஒன்றையே நாங்கள் பரிசாகத் தருவோம்” என்றார்.