தேனி – போடி இடையே தொடங்கிய சோதனை ஓட்டம்; 12 ஆண்டுகளுக்குப் பிறகு மேற்கே சென்ற ரயில்!

தமிழகத்தில் ரயில் போக்குவரத்து இல்லாத மாவட்டமாக தேனி இருந்தது. மதுரை – போடி இடையே 90.4 கிலோ மீட்டர் தூரத்துக்கு மீட்டர்கேஜ் பாதை அகற்றப்பட்டு அகல ரயில் பாதை அமைக்கும் பணிக்காக ரயில் சேவை நிறுத்தப்பட்டது. இந்தப் பணி 2011-இல் தொடங்கியது. 2015-க்குள் பணிகள் முடிக்கப்பட்டு ரயில் இயக்கப்படும் என ரயில்வே நிர்வாகம் அறிவிக்கப்பட்டிருந்தது. ஆனால் போதிய நிதி ஒதுக்கீடு இல்லாமல் ஆமை வேகத்திலும், இடையே பணியே நடக்காமலும் இந்தத் திட்டம் கிடப்பில் போடப்பட்டது. இதனால் தேனி மாவட்ட வர்த்தகர் சங்கம், தொழிற்சங்கம் உள்ளிட்ட பல்வேறு அமைப்புகள் ரயில் பாதை பணியை விரைவில் முடித்து ரயில் இயக்கப்பட வேண்டும் எனப் போராடி வந்தனர். 

ரயில்வே பணிகள் ஆய்வு

இதையடுத்து இத்திட்டத்துக்கு ரூ.592 கோடி நிதி ஒதுக்கப்பட்டு பணிகள் விரைவுபடுத்தப்பட்டன. முதல்கட்டமாக மதுரை – உசிலம்பட்டி, இரண்டாம் கட்டமாக உசிலம்பட்டி – ஆண்டிபட்டி மூன்றாம் கட்டமாக ஆண்டிபட்டி – தேனி எனப் படிப்படியாக பணிகள் முடிக்கப்பட்டுக் கடந்த மே மாதம் முதல் மதுரை – தேனி ரயில் இயக்கப்பட்டு வருகிறது. 

தற்போது நான்காம் கட்டமாக தேனி – போடி இடையே பாதை அமைக்கும் பணிகள் முடிக்கப்பட்டு ரயில் இன்ஜின் இயக்கிப் பார்க்கப்பட்டது. இன்று தென் மண்டல ரயில்வே பாதுகாப்பு ஆணையர் அபய்குமார் ராய் உள்ளிட்ட குழுவினர் தேனி – போடி இடையே பெட்டிகளுடன் கூடிய ரயிலை அதிவேகத்தில் இயக்கி சோதனை நடத்தினர். போடியில் இருந்து மூன்று ரயில் பெட்டிகளுடன் மாலை 3.27 மணிக்குப் புறப்பட்டு மாலை 3.36 மணிக்கு 9 நிமிடங்களில் ரயில் தேனி வந்து சேர்ந்தது.

ரயில் இன்ஜின்

முன்னதாக தேனி ரயில் நிலையத்தில் தேனி – போடி இடையே ரயில் இயக்குவதற்கு அமைக்கப்பட்டுள்ள பிளாக் இன்ஸ்ட்ருமென்ட், கணிப்பொறித் திரை ஆகியவற்றை அபய்குமார் ராய் ஆய்வு செய்தார். பிறகு தேனி – போடிநாயக்கனூர் இடையே 15 கிலோ மீட்டர் இடைவெளியில் உள்ள வாழையாறு ஆற்றுப்பாலம், கோட்டகுடி மற்றும் கோட்டகுடி கிளை ஆற்றுப் பாலங்கள், பூதிப்புரம், வாழையாத்துப்பட்டி சாலை கீழ் பாலங்கள், ரயில் பாதை வளைவுகள், மின்தட குறுக்கீடுகள், நீர்வழி கீழ் பாலங்கள், போடி – புதூர் ரயில்வே கேட் ஆகியவற்றை ஆய்வு செய்தார். 

ரயில் பாதை ஆய்வு

மதுரை – போடி இடையே கடந்த 2011-இல் நிறுத்தப்பட்ட ரயில் சேவை 12 ஆண்டுகளுக்குப் பிறகு மீண்டும் தொடங்க உள்ளதால் மதுரை, தேனி மக்கள் பெரும் மகிழ்ச்சியில் உள்ளனர்.

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.